Published : 13 Mar 2021 07:52 PM
Last Updated : 13 Mar 2021 07:52 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி மார்ச் 17-ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மையத்தை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2097 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி மார்ச் 17-ம் தேதி நடக்கிறது.
பயிற்சியில், வாக்குச்சாவடி அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளும் முறைகள், வாக்காளர்கள் எந்தெந்த அடையாள அட்டை இருக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும். 80 வயது மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வந்தால் என்ன செய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு மையத்தை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு அறைக்கு 40 அதிகாரிகள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு முகக்கவசம் அணிவது, சானிடைசர் வழங்கப்படும்.
இவர்களுக்கு பயிற்சி வழங்க மண்டல அலுவலர்கள், பயிற்சியாளர்களும் தயாராக உள்ளனர். 20 மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பயிற்சி வழங்கப்படும்.
மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 3 தேர்தல் பறக்கும் படை, நிலையான படை, 2 வீடியோ கண்காணிப்பு படை பணியில் உள்ளன. மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.10 லட்சத்துக்கு மேல் கொண்டு சென்றால், திருநெல்வேலி வருமான வரித்துறை இணை ஆணையர் காசி சங்கர் தலைமையிலான குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படும், என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT