Published : 13 Mar 2021 07:07 PM
Last Updated : 13 Mar 2021 07:07 PM
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, இந்த முறையும் வெற்றிபெற்று ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1980-ம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் எம்.ஜி.ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இந்தத் தொகுதியில் போட்டியிடுவதைப் பெருமையாகக் கட்சியினரிடம் கூறி வந்தார். ஆனால், இந்த முறை தொகுதி கள நிலவரம் முன்போல் இல்லாததால் தொகுதி மாற நினைத்தார்.
அதனால் மதுரை தெற்கு, வடக்கு தொகுதிக்கும் சேர்த்து விருப்பமனு அளித்து ‘சீட்’ பெற முயற்சித்தார். ஆனால், கட்சித் தலைமை அவரை மேற்கு தொகுதியிலேயேதான் போட்டியிட வேண்டும் என்று கறாராக கூறவிட்டது. அதனால், வேறு வழியில்லாமல் மீண்டும் செல்லூூ கே.ராஜூ மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், வளர்மதி ஜெபராஜ் ஆகியோரும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானவர்கள். பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை சபாநாயகராகவும் தேர்வு செய்த தொகுதியும் இதுவே.
இந்தத் தொகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று அமைச்சரானார்.
அதனால், இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர்கள் அரசியலில் உச்சத்திற்கு செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு அதிமுக, திமுகவினர் மத்தியில் உண்டு.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து இந்தத் தேர்தலில் திமுகவில் சின்னம்மாள் என்பவர் போட்டியிடுகிறார். அமைச்சரை எதிர்த்து போட்டியிடுவதால் சின்னமாளுக்கு தேர்தல் செலவுக்கு அமைச்சருக்கு இணையாக கட்சி மேலிடத்தில் நிதியை தராராளமாக வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொகுதியில் சிபிஎம், சிபிஐ கட்சியினருக்கு ஒரளவிற்கு செல்வாக்கு உண்டு. சென்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் சிபிஎம் வேட்பாளர் வாசுகி இந்தத் தொகுதியில் அமைச்சருக்கு பிரச்சாரத்தில் கடும் போட்டி கொடுத்தார்.
தற்போது மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, சிபிஎம், சிபிஎம் திமுக கூட்டணியில் உள்ளது. இது திமுக வேட்பாளர் சின்னமாளுக்கு கூடுதல் பலம்.
மேலும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கடந்த மக்களவைத் தேர்தல், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் யாருக்கும் ‘சீட்’ வாங்கிக் கொடுக்கவில்லை.
அதனால், அவர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்களை மதுரை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ பெற்றுத் தருவதாக சமாதானம் செய்து வருகிறார். ஆனால், ஆளும்கட்சி செல்வாக்கு, அமைச்சரின் பண பலம் போன்றவை அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது.
பண பலம் செல்வாக்கு இருந்தாலும், எதிர்க்கட்சியும் கடும் சவாலுக்குத் தயாராகிவருவதால் இந்த முறை அமைச்சர் வெற்றிக்காக இந்தத் தொகுதியில் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய இருக்கும் என்று கள நிலவரம் கூறுகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment