Published : 13 Mar 2021 05:49 PM
Last Updated : 13 Mar 2021 05:49 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வராததால் காரைக்குடி தொகுதியை திருப்பிக் கொடுத்துவிடுவோமா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரக்தியுடன் தெரிவித்தார்.
காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் சாக்கோட்டை கிழக்கு வட்டாரம், கண்டனூர், புதுவயல் பேரூராட்சிகளின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு நிர்வாகிகள் பலர் வரவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ப.சிதம்பரம் கூட்டத்தில் பேசியதாவது: கூட்டத்திற்கு இப்படி பொறுப்பாளர்கள் வராமல் இருந்தால், அடுத்த முறை கூட்டணியில் காங்கிரஸூக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது.
மேலும் நிர்வாகிகள் வராதபோது ஏன் காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடனும். காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துடுவோமா ?
கிடைக்காத தொகுதியில் வேண்டும் என்று சன்டை போடுகிறார்கள், வாங்கிய தொகுதிக்கு முழுமையாக நிர்வாகிகள் வருவதில்லை. இதில் தலைமையை குறை சொல்வது தவறு. தோழமை கட்சிகளை மட்டுமே நம்பி தேர்தல் பணி செய்திருவோமா ?
இந்த தொகுதியை எதற்காக வாங்கினோம் என்றே தெரியவில்லை. சிட்டிங் எம்எல்ஏ உள்ள தொகுதி, பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் வென்றுள்ளோம். இந்த நிலைமையை சொன்னால் வேட்பாளர்கள் நிற்காமல் போய்விடுவார்கள்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு விருப்பம் இல்லையா? இந்த முறை நாம் 16 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடவில்லை. காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிட்டால் 17 பாராளுமன்றத் தொகுதிகளாக உயரும்.
மற்ற கட்சியினர் பிரச்சாரத்திற்கு சென்று விட்டனர். நாம் இன்னும் பூத் கமிட்டி கூட்டம் தான் நடத்திட்டு இருக்கிறோம். சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் நிர்வாகிகள் முழுமையாக வந்த சட்டப்பேரவைத் தொகுதியை வாங்காமல் விட்டுவிட்டோம், என்று வேதனையுடன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT