Published : 13 Mar 2021 06:11 PM
Last Updated : 13 Mar 2021 06:11 PM
மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கை:
"திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்துள்ள தேர்தல் அறிக்கை, அவற்றை நிறைவேற்றித் தர உறுதியளித்துள்ளது. கரோனா நோய் தாக்குதல் நெருக்கடி காலத்தைச் சமாளிக்க ரொக்கப் பண உதவி கேட்டு கதறிய மக்களை எடப்பாடி பழனிசாமி அரசு ஏமாற்றிவிட்டது. திமுக ஆட்சி அமைத்தவுடன் குடும்பத்திற்கு தலா ரூ.4000 உதவி செய்யும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு நாள்தோறும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்தி குடும்பச் செலவுச் சுமையை ஏற்றி வரும் சூழலில், அதனைத் தடுத்து சமாளிக்க பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 நிதியுதவி வழங்க உறுதியளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பள்ளி மாணவர்களுக்குப் பால் வழங்குவதும், வேலைவாய்ப்புத் துறையை திறன் வளர்ப்புத் துறையாக மாற்றுவதும் மனித வளத்தை மேம்படுத்தும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி வரும் சூழலில் அதனை 150 நாட்களாக உயர்த்தி தேர்தல் அறிக்கை உறுதியளித்துள்ளது. இது கிராமப்புற தொழிலாளர்களின் ஆதரவைப் பெறும்.
5 சவரன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி, கல்விக் கடன்கள் தள்ளுபடி, மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள், ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள், அங்கன்வாடி சத்துணவுப் பணியாளர்கள் பணி நிரந்தரம், அரசுப் பணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தரம் என பலதரப்பினரின் எதிர்பார்ப்பையும் பிரதிபலித்துள்ள திமுக தேர்தல் அறிக்கை தேர்தல் களத்தில் மாபெரும் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றி பெறும்.
கடந்த பத்தாண்டுகளாகத் தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் ஒட்டுமொத்தக் கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கை உள்வாங்கி, எதிரொலித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT