Published : 13 Mar 2021 03:32 PM
Last Updated : 13 Mar 2021 03:32 PM
மத்திய அரசு வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் காவிரி ஆற்றின் மணலில் புதைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 108 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது இயற்கையின் கொடுமையாலும், தற்கொலை செய்துகொண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.
ஆனாலும், மத்திய அரசு போராடும் விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் சட்டங்களைத் திரும்பப் பெற மறுக்கிறது. மேலும், பஞ்சாப்பிலிருந்து தமிழகம் வந்த 30 விவசாயிகளைக் கைது செய்துள்ளது மக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
இந்தச் சட்டங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு வந்து இங்கு சாகுபடி செய்தால், அதை உட்கொள்கும் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். வருங்கால சமுதாயத்தைப் பாழ்படுத்த நினைக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும்" என வலியுறுத்தி, திருச்சி ஸ்ரீரங்கம் அருகே தங்களது கழுத்தளவு உடலைக் காவிரி ஆற்றின் மணலில் புதைத்துக் கொண்டு இன்று (மார்ச் 13) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
போராட்டத்தில், திருச்சி மாவட்டத் தலைவர் மேகராஜன், பிரகாஷ், வாலையூர் பொன்னுசாமி, மாவட்டச் செயலாளர் மரவனூர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் செல்லையா பிள்ளை, பழனிச்சாமி, அப்பாவு, சிவக்குமார், சீனிவாசன், காத்தான், ராஜவேல் மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீஸார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 37 பேரைக் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT