

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நேற்று முன்தினம் இரவு முடித்த திமுக, அக்கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 12) வெளியிட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக, தேர்தல் அறிக்கையைத் தயாரித்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதன் வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் இந்தத் தேர்தலின் முதல் கதாநாயகன் எனவும், தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த தேர்தல் அறிக்கை தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் என்ற அவர், இதில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, முக்கியமான வாக்குறுதிகளை அவர் வரிசையாக வாசித்தார். அதன்படி, "முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
32 லட்சம் ஆதரவற்ற கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஆகியோருக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
சிறப்பு தாய் - சேய் நலத்திட்டம் என்ற பெயரால், கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.