Published : 13 Mar 2021 01:46 PM
Last Updated : 13 Mar 2021 01:46 PM
திமுக தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள கேஸ் சிலிண்டர் விலையில் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு என பல அம்சங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். பல்துறை வல்லுனர்கள், நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரின் ஆலோசானைப்பெற்று அறிக்கை வந்துள்ளது தெரிகிறது. இதில் 500 அறிவிப்புகள் உள்ள நிலையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் பொதுமக்கள் சாதாரண ஏழை நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் விஷயங்களை களையும் விதமாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முக்கியமானது மின் கட்டணம் குறித்த அறிவிப்பு. யாராவது இதை கையில் எடுக்க மாட்டார்களா என்பது பொதுமக்களின் கருத்து. காரணம் 100 லிருந்து 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 300 வரை ஒரு கட்டணம், 300 லிருந்து 500 வரை ஒரு கட்டணம், 500-க்கு மேல் போனால் கூடுதல் கட்டணம் என்பதால் பொதுமக்கள் மின்கட்டணத்திற்கே கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.
காரணம் ஒரு மாதத்துக்கான கட்டணம் என்றால் குறைவான மின் பயன்பாடு குறைவான தொகை வரும், ஆனால் தற்போது 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டும்போது யூஇண்ட் எண்ணிக்கையும் கூடும் அப்போது ஒரு யூனிட்டுக்கான கட்டணமும் உயரும் இதை மாற்ற மாதந்தோறும் மின் கட்டணம் கட்டும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது.
தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் இனி மாதந்தோறும் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும் ஒன்றாகும்.
இதேப்போன்று கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் வரவேற்கக்கூடிய ஒன்று. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 குறைவு என்பது சரக்குக் கட்டண உயர்வை விலை ஏற்றத்தை தடுக்கும். வாகன ஓட்டுநர்களுக்கு பயன் தரும் ஒன்றாகும்.
அதேப்போன்று சாதாரண மக்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது பால் விலையை குறைக்கவேண்டும் என்பது. ஆவின் பால் விலையை குறைப்பதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து நிறைவேற்றவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கம் தற்போது ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று சாதாரண ஏழை எளிய மக்கள் நம்பி நிற்பது நியாய விலைக்கடைகளைத்தான். அதில் உளுந்தும் சேர்த்து வழங்கப்படும் என்கிற அறிவிப்பும், கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று சென்னை மக்களை பெரிதும் பாதிக்கும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுக்காணும் வகையில் வீடுதோறும் குழாய்களில் நீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிப்பு குடிநீர் லாரிகளை நம்பி காத்துக்கிடக்கும், சென்னை குடியிருப்புவாசிகளுக்கு சந்தோஷம் தரும் ஒரு அறிவிப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment