Published : 13 Mar 2021 01:23 PM
Last Updated : 13 Mar 2021 01:23 PM

ஆவின் பால், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், ஆவின் பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. இதில், திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி முதல்,

* ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்.

* டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை- பணக்காரர் வேறுபாடில்லாமல் அனைத்து மக்களுக்கும் அவசியமான, அனைவரும் அன்றாடம் வாங்கக்கூடிய பாலின் விலை குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதிமுக தலைமையிலான இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலைக் குறைப்பு செய்யப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x