Published : 12 Jun 2014 08:51 AM
Last Updated : 12 Jun 2014 08:51 AM
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட பிளாஸ்டிக் அடையாள அட்டையை அச்சிட்டு வழங்கும் நிறுவனங்களை அரசு தேர்வு செய்துள்ளது. பான் கார்டு அளவே உள்ள எளிதில் போலியாக தயாரிக்க முடியாத பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அந்த அட்டைகளை அச்சிடும் பணி ஜூலை மாதத்தில் தொடங்குகிறது.
அனைத்து வாக்காளர் களுக்கும், மெல்லிய காகிதத்தில் அச்சிடப்பட்டு, லேமினேட் செய்யப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்நிலையில் போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும், வாக்காளர் அடையாள அட்டைகள், பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைப்பட்டன.
இதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு நவீன முறையில் அச்சடிக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, “பான்கார்டு” அளவுடைய, எளிதில் உடையாத, தண்ணீரில் அழியாத மற்றும் வண்ண புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டைகள், 8.6 செ.மீ. நீளமும், 5.4 செ.மீ. அகலமும் உடையதாக இருக்கும்.
எல்காட் நிறுவனம் டெண்டர்
தமிழகத்தில் வாக்காளர் வண்ண புகைப்பட அடையாள அட்டைகளை அச்சடிப்பதற்காக, தமிழ்நாடு மின்னணு கழகம் (எல்காட்) டெண்டர் கோரியது. கடந்த ஜனவரி மாதம் முதல் அட்டைகளை விநியோகிக்க முதலில் திட்டமிட்டிருந்தாலும், டெண்டர் நடைமுறையில் தாமதம், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு போன்ற பிரச்சினைகளால், வண்ண அடையாள அட்டைக்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தேர்தல் முடிந்ததும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, இந்த நவீன, கையடக்க வாக்காளர் அட்டைகளை அச்சடிப்பதற்கான நிறுவனங்களை எல்காட் நிறுவனம் இறுதி செய்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’ நிருபரிடம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தினர் புதன்கிழமை கூறியதாவது:
5 மண்டலங்களாக பிரிப்பு
பான்கார்டு அளவிலான, ஆனால் நீளவாக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்துகள் அட்டையின் இருபுறமும் இடம்பெறும். யாரும் எளிதில் போலிகளைத் தயாரிக்க முடியாத வகையில், “குவில்லோச்சி” எனப்படும் பாதுகாப்பு டிஜிட்டல் அம்சங்களுடன் கூடியவையாக அந்த அட்டைகள் இருக்கும்.
தமிழகத்தை கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம் என 5 மண்டலங்களாக பிரித்து, வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடும் பணி நடைபெறவுள்ளது. எல்காட் நிறுவனம் நடத்திய டெண்டரில், இரு நிறுவனங்கள் சில நாள்களுக்கு முன்பு இறுதி செய்யப்பட்டுவிட்டன. அவற்றை நிதித்துறை ஒப்புதலுக்காக அனுப்பி வைப்போம். அதன்பிறகு, ஜூலை மாதத்தில் 5 மண்டல தலைமையகங்களில் வண்ண அடையாள அட்டை அச்சிடும் பணி தொடங்கும். முன்னதாக, அங்கு அந்த நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை தொடங்குவார்கள். அடையாள அட்டைகளை அச்சிடும் முன்பு உதவி வாக்குப்பதிவு அதிகாரிகளிடம் அனுமதி பெறப்படும்.
பழைய வாக்காளர்களுக்கு உண்டா?
அடுத்த மாதம் முதல் புதிய வாக்காளர் அட்டைக்காக விண் ணப்பிப்போருக்கு இந்த பிளாஸ் டிக் அட்டைகள் வழங்கப்படும். தொடர்ந்து, அக்டோபரில் நடை பெறும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியின்போதும் மனு செய்வோருக்கும் வழங்கப் படும். ஏற்கெனவே, கருப்பு-வெள்ளை வாக்காளர் அட்டை வைத்திருப்போருக்கு, வண்ண அட்டைகளை வழங்குவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால், அவர்களது வண்ண புகைப்படங்கள் ஏற்கெனவே எங்கள் பதிவேட்டில் இருப்பதால், புதிய அட்டைகளை அவர்களுக்கு வழங்க முடிவெடுத்தால், உடனடி யாக அச்சிட்டு கொடுத்துவிட முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT