Published : 13 Mar 2021 10:41 AM
Last Updated : 13 Mar 2021 10:41 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இரண்டுக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் திமுக தேர்தல் அறிக்கை இன்று பகல் 12-00 மணிக்கு வெளியாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடுகிறார். அதிமுக தேர்தல் அறிக்கையும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அல்லது தங்கள் கட்சி கூட்டணியில் இருந்தால் இந்தவகையான மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம், இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி போன்று அளிப்பார்கள்.
இதில் முக்கிய பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும்போது குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை தேர்தல் அறிக்கை போல் அளிப்பதும் உண்டு. தேர்தல் அறிக்கையில் மக்கள் முக்கியமாக எதிர்ப்பார்ப்பது ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் என்னென்ன வாக்குறுதிகள் அளிப்பார்கள் என்பதே.
அதிலும் சமீப கால தேர்தல் அறிக்கைகள் தேர்வு வினாத்தாள் போன்று மிகக்கவனமாக ரகசியமாக தயாரிக்கப்படுகிறது.
அதிலும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியில் ஆரம்பித்து இலவச மடிக்கணினி வரை ஏழை மக்களுக்கு பயன்தரும் வகையில் அளிக்கப்படும் விலையில்லா பொருட்கள் போன்று எந்தக்கட்சி என்ன? அறிவிக்கிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பும் இருக்கும்.
அதேப்போன்று திமுக கடந்த சில தேர்தல்களில் அதற்கென குழு அமைத்து அந்தக்குழுவில் கட்சி சாரா துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், குழந்தைகள் நல ஆர்வலர், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வேளாண் நிபுணர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரது கருத்துக்களையும் உள்வாங்கி தேர்தல் அறிக்கையை தயாரித்து அதை அறிக்கையாக வெளியிடுகின்றது. இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்த ஆண்டு இரண்டுக்கட்சிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் அளிப்பதை எல்லாம் அறிவிப்பாகவும், அரசாணையாகவும் அறிவிப்பதையும் காண முடிந்தது.
விவசாய கடன் தள்ளுபடி, 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என திமுக தலைவர் பிரச்சாரத்தில் அறிவிக்க அதையே உத்தரவாக சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.
தேர்தல் அறிக்கையில் இது இருக்கும் என, 1000 ரூபாய் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்க தங்கள் தேர்தல் அறிக்கையில் ரூ.1500 மாதந்தோறும் தருவோம், 6 மாதம் சிலிண்டர் இலவசம் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
திமுக, அதிமுக இரண்டுக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எதிர்ப்பார்த்திருக்கும் சூழலில் திமுக முதலில் தேர்தல் அறிக்கையை மார்ச் 13 அன்று வெளியிடுவதாக அறிவித்தது.
இந்நிலையில் இன்று பகல் 12-00 மணிக்கு வெளியிடப்படும் என திமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கொண்ட அறிக்கை தயாரிப்பு குழு அறிக்கையை தயாரித்துள்ளது.
இதில் மிகப்பெரிய இலவச அறிவிப்பும் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேளாண் துறை, மருத்துவப்படிப்பு,
கல்வி வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும். இதனுடன் முக்கிய அறிவிப்பாக இலவசங்கள் பற்றிய விவரம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT