Published : 06 Nov 2015 08:49 PM
Last Updated : 06 Nov 2015 08:49 PM
அச்சு விளக்குகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பாரம்பரிய முறையில் களிமண்ணால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சூளைமேடு பகுதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா நெருங்கிவரும் நிலையில் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக இருக்கும். இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலை கைவிட்டு வெளியூர்களில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. களிமண், மணல் தட்டுப்பாடு மற்றும் அச்சு அகல் விளக்குகள் (மோல்டிங் செய்யப்பட்டவை) அதிகளவு விற்பனைக்கு வந்ததால் தங்களது தொழில் பாதித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மூன்றாம் தலைமுறையாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தினேஷ்குமார் (26) என்ற இளைஞர் கூறும்போது, ‘‘டிப்ளமோ படித்துள்ளேன். வேலை கிடைக்காததால் அகல் விளக்கு தயாரிக்கும் குடும்ப தொழிலில் 5 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன். தீபாவளி மற்றும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழாதான் அகல் விளக்குகள் விற்பனை செய்வதற்கான கால கட்டம். 1 ரூபாய்க்கு நாங்கள் அகல் விளக்குகளை விற்கிறோம். எங்களிடம் வாங்கிச் செல்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை உள்ளடக்கி விற்பனை செய்வார்கள்.
கடந்த ஆண்டு 15 ஆயிரம் அகல் விளக்குகள் விற்பனை செய்தோம். இந்த ஆண்டில் இதுவரை 5 ஆயிரம் எண்ணிக்கைக்கு கூட ஆர்டர் கிடைக்கவில்லை. எங்களுக்கான சந்தை வாய்ப்புகள் கிராமங்களிலேயே முடங்கிவிடுகிறது. அகல் விளக்கு உற்பத்தியும் 4-ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 1 லோடு களிமண் மட்டும் எடுக்க அனுமதி கொடுக்கிறார்கள். ஏரிகளில் மண் எடுப்பதற்கே பல தியாகங்களை செய்ய வேண்டும். சமீபத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து ஏரியில் மண் எடுக்கச் சென்றபோது இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக மைதானத்தை பொக்லைன் இயந்திரத்தால் சமன் செய்த பிறகே களிமண் எடுக்க அனுமதித்தார்கள். மணலுக்கு இருக்கும் தட்டுப்பாடு சொல்லவே வேண்டாம்.
தற்போது அச்சு மூலம் பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் நாங்கள் தயாரிக்கும் அகல் விளக்குகளின் உற்பத்தி விலையைவிட குறைவாக மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்கிறார்கள். இது எங்களது வியாபாரத்தை கொஞ்சம் கொஞ்ச மாக நசுக்கிவிட்டது. சிலர் அகல் விளக்கு தயாரிப்பதை விட்டுவிட்டு அச்சு விளக்குகளை வாங்கி விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் களிமண் அகல் விளக்குகளை பார்க்க முடியாது. நாங் களும் தொழிலை மறந்துவிடுவோம்.
களிமண்ணும் மணலும் எங்களுக்கு சுலபமாக கிடைத்தால் தொழிலை நல்லபடியாக செய்வோம். இல்லாவிட்டால் அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலை விட்டுவிட்டு பிழைப்பு தேடி வெளியூர்தான் செல்ல வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT