Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
நகை அடகு கடைகளில் வைக்கப் பட்ட நகைகளை வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்கள் கழித்து திடீரென திரும்பப் பெறுவது தெரியவந்தால், அதன் விவரத்தை மாவட்டதேர்தல் பிரிவுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தர விட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நகை அடகு கடை களின் உரிமையாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்புகுழுவினர் மற்றும் காவல் துறை யினர் கண்காணிப்புப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். நகை அடகு தொழில் செய்வோருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர மறைமுகமாக பல்வேறு யுத்திகளை கையாள முயற்சி எடுப்பார்கள். இதனை, தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.
இருப்பினும், நகை அடகு கடைகளில் வாக்காளர்கள் ஏற்கெனவே அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டோக்கன் வழங்குவது, அடையாள வில்லைகள் வழங்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சட்ட நடவடிக்கை
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் நகை அடகு கடைகளில் வைக்கப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ மொத்தமாக மீட்டு அதை வாக்காளர்களுக்கு திரும்ப வழங்கும் முயற்சிக்கு நகை அடகு உரிமையாளர்கள் துணை போனால், அது மக்கள் பிரிதிநிதித் துவச்சட்டத்தின் கீழ் தண்டனைக் குரிய குற்றச்செயலாக கருதப்படும்.
மேலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் இருப்பதால் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை நகை அடகு கடைகளுக்கு வந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை கொஞ்சம், கொஞ்சமாகவோ அல்லது மொத்தமாகவோ மீட்பது தெரியவந்தாலோ அல்லது நீண்ட நாட்கள் வட்டியும், அசலும் செலுத்தாமல் இருந்த நகைக்கு உடனடியாக பணத்தை செலுத்தி நகைகளை மீட்பது தெரியவந்தால் அது பற்றிய விவரங் களை உடனடியாக மாவட்ட தேர்தல் பிரிவுக்கும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கும் நகை அடகு கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறி நகை அடகு கடை உரிமையாளர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT