Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே மனு தாக்கல்

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்பி டாக்டர் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அருகில், திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காளியப்பன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர். அடுத்த படம்: திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனாகர்க்கிடம் சுயேட்சை வேட்பாளர் மனிதன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். படங்கள்: ந.சரவணன்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாளான நேற்று அரசியல் கட்சியினர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை, திருப்பத்தூர் தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 19-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதிமுக, திமுக, நாம் தமிழர், பாமக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்திருந்தாலும் முதல் நாளில் அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அரசு அலுவலகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் துறையினர் பாதுகாப்புப்பணிக்காக நிறுத்தப்பட்டி ருந்தனர். அவ் வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது. கரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டனர். காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

பிற்பகல் 1.30 மணியளவில் நாட்றாம்பள்ளி வட்டம் அக்ரகாரம் தென்றல் நகரைச் சேர்ந்த மனிதன் (52) என்பவர் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய பின்நோக்கி வந்தார். இவர், இதற்கு முன்பு வார்டு உறுப்பினர் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்டமுறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுதாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனாகர்க்கிடம் அவர் மனு தாக்கல் செய்தார். அப்போது, சார் ஆட்சியர் முன்னிலையில் அவர் உறுதிமொழியை ஏற்றார்.

ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் நேற்று மனு தாக்கல் செய்யவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x