Published : 12 Mar 2021 09:30 PM
Last Updated : 12 Mar 2021 09:30 PM

காரைக்குடியில் வாசன் ஆதரவாளரைக் களம் இறக்கப் போராடும் முக்கியப் புள்ளி

சென்னை

காங்கிரஸ் கட்சிக்கு பலம் வாய்ந்த காரைக்குடியில், திமுக ஆதரவு அலை வீசும் நேரத்தில் புதுமுக வேட்பாளரைக் களம் இறக்க அங்கு செல்வாக்கு பெற்ற மூத்த தலைவரின் மகன் போராடுவதால் வீணாக காரைக்குடியை பாஜகவுக்குத் தாரை வார்க்க நேருமோ என மூத்த தலைவர்கள் தவிக்க, காங்கிரஸ் மேலிடம் வரை புகார் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் முதல் தொகுதி காரைக்குடியாக இருக்கும். அந்த அளவுக்கு காங்கிரஸுக்குக் கைகொடுக்கும் தொகுதி ஆகும்.

ஆரம்பக் காலங்களில் காங்கிரஸ் மட்டுமெ வென்ற தொகுதி பின்னர் அதிமுக, திமுக மாறி மாறி வென்ற நிலையில் 2001-ல் திமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட எச்.ராஜா வென்றார். அதன் பின்னர் 2006-ல் காங்கிரஸ் கைப்பற்றியது. 2011-ல் அதிமுக வெல்ல, 2016 தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தாலும் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வசமானது.

இம்முறை காங்கிரஸ் கேட்ட முதல் தொகுதி காரைக்குடி. ஆனால், காரைக்குடியில் போட்டியிட்ட கே.ஆர்.ராமசாமி திருவாடானையில் போட்டியிட அங்கு சீட்டு கேட்டதால் திருவாடானை தொகுதியையும் காங்கிரஸ் கேட்டுப் பெற்றது.

இதனால் காரைக்குடி தொகுதி காலியானது. அதற்குப் பொருத்தமான ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். காரைக்குடியில் இம்முறை பாஜக போட்டியிடுவதால் காங்கிரஸின் வெற்றி எளிதாக இருக்கும் என மூத்த தலைவர்கள் நினைக்கின்றனர். அதே நேரம் பாஜக சார்பில் ஏற்கெனவே 2001-ல் வெற்றிபெற்ற எச்.ராஜாவே நிறுத்தப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

எச்.ராஜா நிறுத்தப்பட்டாலும் சரியான வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் மீண்டும் இத்தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக்கொள்ளும் என மூத்த தலைவர்கள் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அங்கு செல்வாக்குள்ள ஒரு தலைவரின் மகன், தனது ஆதரவாளர் ஒருவரை அங்கு நிறுத்துவதற்காக கடுமையாக அழுத்தம் தருவதாக அத்தொகுதியில் உள்ள காங்கிரஸார் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. அந்த ஆதரவாளர் காங்கிரஸிலிருந்து தமாகா பிரிந்தவுடன் பிரிந்து சென்றவர், வாசனுடன் பயணித்தவர், சமீபத்தில் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பிய நபர். அவரை நிறுத்த செல்வாக்குள்ள தலைவரின் மகன் அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராகுல் காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும் உள்ளூர் காங்கிரஸ் தரப்பிலிருந்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாம். கையில் கிடைத்த காரைக்குடி வீணாக பாஜக கைக்குப் போகப்போகிறது என அங்குள்ள காங்கிரஸார் புலம்புகின்றனர்.

சமீபத்தில் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சிக்கு சில அறிவுரைகளைக் கூறியிருந்தார். எண்ணிக்கை என்பதைவிட திமுக அணியில் காங்கிரஸ் நீடிப்பது ஒன்றே பாஜகவைத் தடுக்கும் வழி. காங்கிரஸ் வீழ்ந்தால் பாஜக அங்கு தலையெடுத்துவிடும். பிறகு தமிழகத்தில் பாஜக காங்கிரஸுக்கு மாற்றாக வளரும். இது இரு கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் என எச்சரித்திருந்தார்.

ஆனால், பாஜக நேரடியாக மோதும் தொகுதியில் இதுபோன்ற நிலை காங்கிரஸ் தனது சிட்டிங் தொகுதியை பாஜகவுக்குத் தாரை வார்த்துவிடும், கே.ஆர்.ராமசாமி தொகுதி மாறிய நிலையில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே தொகுதியைத் தக்க வைக்க முடியும் என்கின்றனர் உள்ளூர் காங்கிரஸார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x