Published : 12 Mar 2021 07:49 PM
Last Updated : 12 Mar 2021 07:49 PM

ராகுல்காந்தியே நேரடியாக கேட்டதால் மேலூரை காங்கிரஸுக்கு ஒதுக்கிய ஸ்டாலின்: மதுரை மாவட்ட திமுகவினர் அதிர்ச்சி

மதுரை

ராகுல்காந்தியே நேரடியாக ஸ்டாலினிடம் கேட்டதால் மதுரை மேலூர் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த கால தேர்தல் வரலாற்றை திரும்பிப்பார்த்தால் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் அதிக முறை வெற்றிப்பெற்ற தேசிய சிந்தனை கொண்ட தொகுதியாக இருந்துள்ளது. இத்தொகுதியில் 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து காங்கிரஸ் 4 முறை வெற்றிப்பெற்றுள்ளது. 1996ம் ஆண்டு தமாகா வெற்றிப்பெற்றுள்ளது.

அதன்பிறகு 2001 முதல் தற்போது வரை அதிமுக தொடர்ந்து 4 முறை வெற்றிப்பெற்று இந்தத் தொகுதியை அதன் கோட்டையாக தக்க வைத்துள்ளது. திமுக 1971ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டும் வெற்றி பெற்றது.

தற்போது இந்தத் தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்த பெரிய புள்ளான் உள்ளார். தற்போது அவரே மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் திமுகவே நேரடியாக போட்டியிட முடிவு செய்திருந்தது. அதற்காக மாவட்ட செயலாளர் மூர்த்தி பரிந்துரை செய்த வேட்பாளர், கட்சித் தலைமையும் சிலரின் பெயர்களையும் பரிசீலித்தது.

ஆனால், திடீரென்று திமுக கூட்டணியில் மேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘திமுக கூட்டணியில் மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட மதுரை வடக்கு தொகுதி ஒதுக்க தீர்மானித்து இருந்தனர். இந்தத் தொகுதியில் கடந்த முறை வெற்றிப்பெற்ற அதிமுக எம்எல்ஏ விவி.ராஜன் செல்லப்பா இந்த முறை திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதனால், திமுகவும் தேசிய கட்சிகளே மோதிக் கொள்ளட்டும் என்று காங்கிரஸுக்கு ஒதுக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியே ஸ்டாலினிடம் நேரடியாக பேசி வடக்கு வேண்டாம், எங்களுக்கு மேலூர் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுள்ளார். அதன் அடிப்படையிலேயே திமுக மேலூரை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.

விருதுநகர் எம்.பி. மாணிக்கதாகூர் இந்த தொகுதி தனது உறவினர் ஒருவருக்கு போட்டியிட ராகுல் காந்தியை வைத்து ஸ்டாலினிடமே பேசியதாலே இந்த மாற்றம் ஏற்பட்டது, ’’ என்றார். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானால் வேட்பாளர் யார் என்ற விவரம் தெரிய வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x