Published : 12 Mar 2021 07:31 PM
Last Updated : 12 Mar 2021 07:31 PM
தமிழக அரசின் கடைசி பட்ஜெட் குறித்து பொது மேடையில் கேள்வி எழுப்பப்படும் என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரசடிப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (மார்ச் 12) நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:
"சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
ஆலங்குடி தொகுதியில் காங்கிரஸிடம் பெரிய சக்தி உள்ளது. எனவே, ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன், அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து, அவர்களை பணியில் ஈடுபடுத்துவார் என்று நம்புகிறேன். அதோடு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூலம் எதை ,எப்படி செய்ய வேண்டுமோ அதையும் செய்வோம்.
நமது குறி தேர்தல் வெற்றி மட்டுமல்ல. நாடு எதற்காக சுதந்திரம் பெற்றதோ, மொழி வாரி மாநிலம் அமைக்கப்பட்டதோ என்பதையெல்லாம் மறந்துவிடக்கூடாது.
தமிழ்மொழி மூத்த மொழி என்பதை கடந்த வாரம்தான் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். உயர்ந்த கலாச்சாரம், மொழிவழியாக அமைந்த நம் மாநிலத்தை இன்னொரு கலாச்சாரமோ, இன்னொரு மொழியோ ஆள்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
இதே வழியில் போனால் பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லாத அளவுக்கு ஜனநாயகத்தை சிதைக்கிற சர்வாதிகார நாடாக இந்தியா மாறிவிடும். இந்த நிலையை தடுக்கப்பட வேண்டும்.
ஒரு கடனை தள்ளுபடி செய்கிறோம் என்றால் அதற்கான தொகையை ஒதுக்கிவிட்டுத்தான் செய்ய வேண்டும். ஆனால்,தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமலே கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி தள்ளுபடி செய்வது?.இதெல்லாம் தேர்துலுக்கான மூன்றாம்தர யுத்திதான் என்பது மக்களுக்கு தெரியும்.
தேர்தல் முடிந்து "நான் சொன்னதைத்தான் ஸ்டாலின் செய்கிறார். அல்லது நான் சொன்னேன் ஸ்டாலின் செய்யவில்லை" என்று முதல்வர் பழனிசாமி கருத்து கூறுவார்.இதுதான் நடக்கும்.
தமிழக முதல்வரின் பட்ஜெட் ஆவணங்களை படித்து பார்த்துள்ளேன். நீங்களும் படியுங்கள். மேடையில் கேள்வி கேட்போம்.
ரூ.129 கோடிக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் 1959-ல் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்தார். அதே திட்டம் தற்போது ரூ.14,000 கோடியாக உள்ளது.
இந்த திட்டத்தை பழனிசாமி முதல்வராக பதவியேற்ற 3-வது நாளே தொடங்கி இருந்தால் மக்கள் வரவேற்று இருப்பார்கள்.ஆனால், பதவி போறதுக்கு 3 நாட்களுக்கு முன்னாடி அடிக்கல் நாட்டுகிறார் என்றால் எப்படி இந்த திட்டம் நிறைவேறும்?. நிதி, பல்வேறு துறையிடம் முறையான அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது.
ரோஜா, மல்லிகை போன்ற பல்வேறு பூக்களோடு, இதுவும் ஒரு பூ அவ்வளவுதான். இந்த அறிவிப்பினால் எந்த பலனும் இல்லை. ஆட்சியில் இருந்தவர்கள் 5 ஆண்டுகளில் என்னென்ன செய்தோம் என்றுதான் கூற வேண்டும். இனிமேல் செய்வோம் என்று கூறக்கூடாது.
பெரு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி மத்திய அரசு தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரி சலுகை என மொத்தம் ரூ.3 லட்சத்து 83 ஆயிரம் கோடி 100 பெரு நிறுவன முதலாளிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.
ஆனால், கரோனா சமயத்தில் இந்தியாவில் கிராமப்புறங்களைச் சேர்ந்த 13 கோடி குடும்பங்களுக்கு ரூ.5,000 வீதம் கொடுத்தால் ரூ.65,000கோடி போதும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டது. ஆனால், இதைத் தராமல் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது" என்றார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT