Published : 12 Mar 2021 07:24 PM
Last Updated : 12 Mar 2021 07:24 PM
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவுவதால் கடந்த முறை போல் தனித்துப் போட்டியிட அனுமதி தருமாறு அதிமுக நிர்வாகிகள் கோரியுள்ளனர். கடும் அதிருப்தியில் அதிமுக இருப்பதால் மேலிட தலைவர்களுடன் பாஜக ஆலோசித்து, டெல்லி மேலிட உத்தரவுப்படி சமாதானப்படுத்தி கூடுதல் இடங்களை ஒதுக்கி தர திட்டமிட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன.
என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பங்கீடு செய்துகொள்ள வேண்டும். இதில், அதிகமான தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்புகிறது. இதனால், பாமகவுக்கு தொகுதியில்லை என கூறிவிட்டனர். இது பாமக தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், பாமக அமைப்பாளர் தன்ராஜ், தொகுதி வழங்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்து 24 மணிநேரத்திற்குள் தகவல் தர வேண்டும் என கெடுவும் விதித்துள்ளார். அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாமக அமைப்பாளர் தன்ராஜை சந்தித்து சமாதான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இத்தகைய சூழலில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்கு 4 தொகுதிதான் ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. இது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் குறைந்தபட்சம் 7 தொகுதியை பெற வேண்டும் என அதிமுக முயல்கிறது.
இந்நிலையில், தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் புதுவைக்கு வந்தார். பாஜக தலைவர்களை சந்தித்த அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து புதுவை அதிமுக முக்கிய நிர்வாகிகள் கட்சித்தலைமையை சந்திக்க சென்னை சென்றனர்.
இது பற்றி, அதிமுக கட்சி உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதுச்சேரி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர் துணை முதல்வரை சந்திக்கும்படி அறிவுறுத்தினார். இதன்பின் துணை முதல்வரை சந்தித்தனர். அப்போது, புதுவையில் கடந்த தேர்தலை போல தனித்து போட்டியிட அனுமதிக்க வேண்டும். குறைந்த தொகுதிகளை பெறக்கூடாது என அதிமுகவினர் வலியுறுத்தினர். துணை முதல்வர் பாஜக மேலிடத்திடம் பேசி முடிவெடுப்பதாக கூறினார். இதனால் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பமும், இழுபறியும் நீடிக்கிறது" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் இருப்பது இக்கட்டான சூழலுக்கு தள்ளிவிடும் என பாஜகவினர் கருதுகின்றனர்.
இதுபற்றி பாஜக உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "கூட்டணி நிலவரத்தை பாஜக அகில இந்திய தலைமையை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது கட்சி மேலிடம் சில ஆலோசனைகளை வழங்கியது. அதன்படி அதிமுகவினரை சமாதானப்படுத்தி கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி தரும் முடிவுக்கு பாஜக வந்துள்ளது, நாளைக்குள் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிடும். தமிழக அதிமுக தலைவர்களுடன் இதுபற்றி பாஜகவினர் பேசி முடிவு எடுக்கவுள்ளனர்" என்று குறிப்பிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT