Last Updated : 12 Mar, 2021 07:03 PM

 

Published : 12 Mar 2021 07:03 PM
Last Updated : 12 Mar 2021 07:03 PM

அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் துரைமுருகனுக்கும் ரகசிய உடன்பாடு; தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அமைச்சர் நிலோபர் கபீல் புகார்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நிலோபர் கபீல்.

வாணியம்பாடி

தேர்தலில் 'சீட்' மறுக்கப்பட்டாலும் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரின் வெற்றிக்கு நிச்சயம் உழைப்பேன் என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.

வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீலுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிப்பெற சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. இதன் காரணமாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.

இது அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்டித்து, நேற்று (மார்ச் 11) முன்தினம் அமைச்சர் வீட்டு முன்பாக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து அமைச்சர் நிலோபர் கபீல் இன்று (மார்ச் 12) வாணியம்பாடிக்கு வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ரகசிய உடன்பாடு உள்ளது. அவர்களுக்கு 'மாமன்', 'மச்சான்' உறவு இருப்பது தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏலகிரி மலையில் இதற்காக தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி காட்பாடியில் செல்வாக்கு இல்லாத ராமு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜோலார்பேட்டையில் வாணியம்பாடியைச் சேர்ந்த தேவராஜ் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரசு டெண்டர்கள் அனைத்தும் திமுகவைச் சேர்ந்த தேவராஜ் குடும்பத்தார் தான் செய்து வருகின்றனர். அவர் அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாணியம்பாடியில் நான் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை என என் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் என் சமுதாய மக்கள் பாஜகவை ஏற்கவில்லை. இதனால், வாக்குகள் சரிந்தன. இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்னால் முடிந்த அளவுக்கு நான் தேர்தல் பணியாற்றினேன். வாக்குப்பதிவு நடைபெறும் பூத்திலேயே நான் அமர்ந்திருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அமைச்சர் கே.சி.வீரமரணி அப்படியா தேர்தல் பணியாற்றினார்? இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களிடம் பணம், நிலம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு அமைச்சர் கே.சி.வீரமணி சீட் வழங்க கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து கட்சி தலைமை விசாரிக்க வேண்டும். இந்த முறை எனக்கு சீட் வழங்கவில்லை, இதனால் நான் கட்சி மாறுவேன் என சிலர் கூறுகின்றனர். பல கட்சிகளிடம் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், நான் போக மாட்டேன்.

கடைசி வரை அதிமுகவில் தான் இருப்பேன். முதல்வர் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஜெயலலிதாவின் அரசு தமிழகத்தில் ஆட்சி செய்ய நான் தேர்தல் பணியாற்ற உள்ளேன். வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில்குமார் வெற்றிப்பெற்ற நிச்சயம் உழைப்பேன்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x