Published : 20 Nov 2015 06:18 PM
Last Updated : 20 Nov 2015 06:18 PM
தமிழகத்தில் கனமழை பெய்து முடிந்த நிலையில், புதியதாக தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு பரப்பக் கூடிய ஏடிஸ் கொசுக்களை அழிக்கவும், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக தமிழகத்தில் குளிர் சீதோஷண நிலைக்கு மாறியுள்ளது. மழையால் நோய் பரவும் கிருமிகள், டெங்கு நோய் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு பலர் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழையால் ஏற்படும் நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காத்திட, தமிழக முதல்வர் தலைமையில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட்டு, நோய் பாதிப்பு தடுப்பு பணியில் மருத்துவத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகர பகுதியில் தனியார் மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், டெங்கு நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளும் உள்ளனர்.
மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேங்கியுள்ள நீர் நிலைகளில் மருந்து தெளித்தும், கொசு மருந்து (புகை) அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் மாநகர நல அலுவலர் மருத்துவர் செல்வக்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது, பெய்த மழையால் தேங்கியிருந்த நீர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. டெங்கு நோய் பரப்பும் லார்வா உருவாக வாய்ப்பில்லை. மழை முடிந்து ஒரு வாரம் கழித்து, தற்போது, தேங்கியுள்ள மழை நீரால் வேண்டுமானால் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது.
இதனால், தமிழக அரசு மாநிலம் முழுவதும் மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதாரண காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருந்தாலும், உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது. காய்ச்சலில் பல வகை உள்ளது.
ஆர்டிடி காய்ச்சலில் டெங்கு, சிக்குன்குன்யா, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், மலேரியா என 15 விதமான காய்ச்சல் உள்ளது. இதில், 50 சதவீதம் பாஸிடிவ், 50 சதவீதம் நெகடிவ் முடிவுகளை கொண்டே எந்தவகையான காய்ச்சல் என கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெங்கு குணப்படுத்தக் கூடியது என்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசு அனைத்து காய்ச்சலையும், டெங்கு காய்ச்சலாக கருதி உயர் சிகிச்சை அளிக்க கூறியுள்ளதால், நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மருத்துவத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளோம்.
சேலத்தில் டெங்கு நோய் உட்பட 280 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர் களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT