Published : 12 Mar 2021 05:54 PM
Last Updated : 12 Mar 2021 05:54 PM
கோவை, திருப்பூர், நீலகிரியில் மொத்தம் 12 தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.
நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று (12-ம் தேதி) வெளியிடப்பட்டன. அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 12 தொகுதிகளில் திமுக, அதிமுக இரண்டும் நேரடியாகப் போட்டியிடுகின்றன. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய 7 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன.
சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, அதிமுக சார்பில் முன்னாள் மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம் ஆகிய இருவரும் மோதுகின்றனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் பையா என்ற ஆர்.கிருஷ்ணன், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ ஆகிய இருவரும், கோவை வடக்குத் தொகுதியில் திமுக சார்பில் வ.மா.சண்முகசுந்தரம், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜூனன் எம்எல்ஏவும், தொண்டாமுத்தூரில் திமுக சார்பில் மாநில சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அதிமுக சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் டி.ஆர்.சண்முகசுந்தரம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோரும், கிணத்துக்கடவில் திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் ஆகியோரும், பொள்ளாச்சியில் திமுக சார்பில் மருத்துவர் வரதராஜன், அதிமுக சார்பில் துணை சட்டப்பேரவைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், உதகை ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் குன்னூரில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூரில் திமுக சார்பில் காசிலிங்கம், அதிமுக சார்பில் பொன்.ஜெயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், காங்கயம், திருப்பூர் தெற்கு, மடத்துக்குளம் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன. காங்கயம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ.எஸ்.ராமலிங்கம், திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் க.செல்வராஜ், அதிமுக சார்பில் குணசேகரன் எம்எல்ஏ, மடத்துக்குளம் தொகுதியில் திமுக சார்பில் ஜெயராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் புறநகர் கிழக்கு மாவட்டச்செயலாளர் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT