Published : 12 Mar 2021 05:46 PM
Last Updated : 12 Mar 2021 05:46 PM

கோவை மாவட்ட திமுக வேட்பாளர்கள் விவரம்; 3 மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

பிரதிநிதித்துவப் படம்

கோவை

திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது. நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 12) வெளியிட்டார். கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில், கோவை தெற்கு, சூலூர், வால்பாறை ஆகிய தொகுதிகள் முறையே காங்கிரஸ், கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிங்காநல்லூர் தொகுதிக்கு, அத்தொகுதியின் 'சிட்டிங்' எம்எல்ஏவும், மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக், கோவை வடக்குத் தொகுதிக்கு வடவள்ளி பகுதி கட்சி நிர்வாகி வ.மா.சண்முகசுந்தரம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன், கிணத்துக்கடவு பகுதிக்கு திமுக நிர்வாகி குறிச்சி பிரபாகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், குறிச்சி பிரபாகரன் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இருப்பினும், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் தொகுதிக்கு, அப்பகுதி திமுக நிர்வாகி டி.ஆர்.சண்முகசுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமாகாவில் இருந்த அவர், கடந்த முறை அக்கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த திமுக தலைமை ஆலோசித்து வந்தது. மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சி.ஆர்.ராமச்சந்திரன் நிறுத்தப்படலாம் என பேச்சு நிலவியது. ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அதிமுக வேட்பாளரான எஸ்.பி.வேலுமணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர். பொள்ளாச்சித் தொகுதிக்கு மருத்துவர் வரதராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை

கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ள சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோருக்கு 'சீட்' வழங்கப்படவில்லை. இதில் சி.ஆர்.ராமச்சந்திரனுக்கு தொண்டாமுத்தூர் தொகுதி, தென்றல் செல்வராஜூக்கு பொாள்ளாச்சி தொகுதி, மருதமலை சேனாதிபதிக்கு கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கப்படலாம் என பேச்சு நிலவியது. ஆனால், இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம், மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் (மாநகர் கிழக்கு), பையா என்ற ஆர்.கிருஷ்ணன் (மாநகர் மேற்கு) ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x