Published : 12 Mar 2021 03:23 PM
Last Updated : 12 Mar 2021 03:23 PM
எங்கள் தலைவரின் சாதனையைச் சொன்னாலே வெற்றிதான் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் வெளியிட்டார்.
இதில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் சம்பத்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
''எங்கள் தலைவர் மற்றும் கருணாநிதியின் சாதனையைச் சொன்னாலே வெற்றிதான். கரோனா காலத்தில் நாங்கள் மக்களுக்குச் செய்த நலத்திட்டங்கள் மூலம் வெற்றி பெறுவோம். எங்களின் எடப்பாடி தொகுதிக்குத் தமிழக முதல்வர் எதுவுமே செய்யவில்லை. 10 ஆண்டுகளாக அவர் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால் முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. எங்கள் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.
இதனால் அடிமட்ட மக்கள் முதல் மேல்மட்ட மக்கள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவரிடம் இருந்து அறிக்கை மட்டும்தான் வருகிறது. எந்த செயல்பாடும் இல்லை. இத்தகைய சூழல் எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
அவரை எதிர்த்துப் போட்டியிடுவது எங்களுக்கு சவாலே கிடையாது. எங்கள் தலைவரின் சாதனையைச் சொன்னாலே நாங்கள் ஜெயித்துவிட்டு வந்துவிடுவோம்''.
இவ்வாறு சம்பத்குமார் தெரிவித்தார்.
எடப்பாடி தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார். இம்முறை இத்தொகுதியில் அவர் மூன்றாவது முறையாகக் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT