Published : 12 Mar 2021 02:43 PM
Last Updated : 12 Mar 2021 02:43 PM
அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியானது.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.
ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது.
அதேபோன்று, அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் நேற்று (மார்ச் 11) வெளியானது. அதன்படி, 1. ஆலந்தூர் (28), 2. ஆம்பூர் (48), 3. திருச்சி மேற்கு (140), 4. திருவாரூர் (168), 5. மதுரை மத்தியம் (193), 6. பாளையங்கோட்டை (226) ஆகிய தொகுதிகளில் எஸ்டிபிஐ போட்டியிடுகிறது.
இந்நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச் 12), சென்னையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் விவரங்களை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் வெளியிட்டார்.
அதன்படி, தொகுதி மற்றும் வேட்பாளர்கள் விவரம்:
1. பாளையங்கோட்டை - வி.எம்.எஸ். முகம்மது முபாரக் என்கிற நெல்லை முபாரக் (மாநில தலைவர் - எஸ்டிபிஐ கட்சி, தமிழ்நாடு)
2. ஆம்பூர் - அச.உமர் பாரூக் (மாநில பொதுச்செயலாளர் - எஸ்டிபிஐ கட்சி, தமிழ்நாடு)
3. ஆலந்தூர் - எம்.முகம்மது தமீம் அன்சாரி (மாவட்ட பொ.செயலாளர் - எஸ்டிபிஐ கட்சி, தென்சென்னை)
4. மதுரை மத்தி - ஜி.சிக்கந்தர் பாட்ஷா (மாவட்ட துணைத் தலைவர் - எஸ்டிபிஐ கட்சி, மதுரை) (வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் - எஸ்டிபிஐ கட்சி)
5. திருவாரூர் - எம்.ஏ.நஸிமா பானு (மாநில பொதுச்செயலாளர் - விமன் இந்தியா மூவ்மெண்ட்)
6. திருச்சி மேற்கு - ஆர்.அப்துல்லா ஹஸ்ஸான் (மாவட்ட தலைவர் - எஸ்டிபிஐ கட்சி, திருச்சி)
தொடர்ந்து உரையாற்றிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றிபெறச்செய்யுமாறு வாக்காளர்களுக்கும், கூட்டணியின் வெற்றிக்காக தீவிர களப்பணியாற்றுமாறு எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT