Published : 12 Mar 2021 02:40 PM
Last Updated : 12 Mar 2021 02:40 PM
சுதந்திர உணர்வு புதுச்சேரியின் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறது என சுதந்திர தின 75 வது நிறைவு விழா நிகழ்ச்சி கொண்டாடட்டத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் சுதந்திர தின 75 வது ஆண்டு நிறைவு விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வருகிறது. அதற்கு முந்தைய 75 வாரங்களுக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் விமரிசையாகக் கொண்டாடுமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி 75-வது சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று(மார்ச் 12) முதல் புதுச்சேரியில் தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கடலில் 75 படகுகள் தேசியக்கொடியுடன் பேரணி, 75 மாணவர்கள் பங்கு பெற்ற சைக்கிள் பேரணி ஆகியவற்றை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை தலைமை செயலகம் எதிரில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதேபோல் தண்டி யாத்திரை தொடக்க நாளின் 91 வது நாளை நினைவு கூறும் வகையில் என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆரம்பித்து வைத்தார்.
விடுதலைக்காக போராடிய பழம்பெரும் விடுதலை வீரர்களை கவுரவித்து பாராட்டினார். பின்னர் இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ‘‘நமது 75 வது சுதந்திர தின நிறைவை இன்றைய தினத்திலிருந்து 75 வாரங்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன் முதல் பகுதியாக இன்று தண்டி யாத்திரை நடந்த தினம். ஆகவே இந்த தினத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். நேற்றைய தினம் தியாகி சுந்தரமூர்த்தி என்பவரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தேன். இன்று 75 படகுகளில் தேசிய கொடியேந்தி கடலில் பேரணி மற்றும் சைக்கிள் பேரணி, குழந்தைகள் தண்டியாத்திரை, 75 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
நம்முடைய தேச கொண்டாடத்தில் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும். புதுச்சேரி மண் ஆன்மீக பூமி. ஆதே நேரத்தில் தேசிய பூமி. இந்த பூமியில் அரவிந்தர் வாழ்ந்து ஆன்மீகத்தையும், தேசியத்தையும் வளர்த்தார். பாரதி போராட்டத்தை வீரியப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக பாரதிதாசன் இருந்தார். அன்னை வாழ்ந்த மண்.
இந்த மண் சுதந்திர கலத்தை கொடுத்த மண். சுதந்திர உணர்வு புதுச்சேரியின் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறது. அதனால் சுதந்திர கொண்டாட்டம் 75 வாரங்கள் நடப்பதற்கு அனைவரும் துணை புரிய வேண்டும். இன்னும் கரோனா தொற்று முழுமையாக போகவில்லை. ஆகவே நான் அனைவரையும் கேட்டுக்கொள்வது அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, ஏடி மகேஸ்வரி, தலைமை செயலாளர் அஸ்வணி குமார், துணைநிலை ஆளுநரின் சிறப்பு செயலாளர் சுந்தரேசன், கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று மாலை கடற்கரை காந்தி சிலை முன்பு புதுச்சேரி காவல்துறை நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் காவல்துறையின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT