Published : 12 Mar 2021 10:10 AM
Last Updated : 12 Mar 2021 10:10 AM
கோவில்பட்டி தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை என்றும் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் எனவும் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2-வது பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், தென்காசி வடக்கு மண்டல அதிமுக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் கோ.ராமச்சந்திரனை 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அ.சுப்பிரமணியனை விட 428 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்று, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, முதன்முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருப்பது அதிமுகதான். கோவில்பட்டி தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி, ஏன் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் வேட்பாளரை அறிவித்தாலே எங்களுக்கு வெற்றி என்ற நிலையில்தான் களத்தில் உள்ளோம். அப்படித்தான் நானும் வந்திருக்கிறேன்.
கோவில்பட்டி தொகுதி, தென் மாவட்டத்திலேயே ஏன் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக இருக்கும். தேர்தல் முடிவுகள் அப்படி அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT