Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு உறுதியாக இருந்த நிலையில், திருமாவளவனை வைத்து கூட்டணி கட்சிகளை வழிக்கு கொண்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலினை அக்கட்சி நிர்வாகிகள் ரகசியமாக பாராட்டியுள்ளனர்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழு கடந்த பிப்ரவரி 25-ம் தேதியில் இருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது. முதல்க்கட்டமாக காங்கிரஸ் தரப்பில் 54 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக தரப்பில் தலா 12 தொகுதிகளும் கேட்கப்பட்டன.
இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 45 தொகுதிகள் வரை இறங்கி வந்த நிலையில் 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய 4 கட்சிகளும் பேசி வைத்தாற்போல் 12 தொகுதிகளுக்கும் கீழே இறங்கி வரவில்லை. மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திமுக தரப்பில் பல விதமான வாக்குறுதிகள் அளித்த போதும் இந்த 4 கட்சி தலைவர்களும் பிடி கொடுக்கவில்லை. திமுக தரப்பில் 6 தொகுதிகள், தனி சின்னம் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிட்டதால் மார்ச் 3ம் தேதி மாலை திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைக்கு மதிமுகவும், விசிகவும் செல்லவில்லை.
இதனால் திமுக மேலிடம் இன்னும் 2 தொகுதிகள் வரை இறங்கி கொடுக்கலாமா? என யோசித்தது. அந்த நிலையில் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு புது யோசனை ஒன்றை கூறினார். அதாவது, கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவின் கணேச மூர்த்தி, விசிகவின் ரவிகுமார் ஆகிய இருவரையும் வைத்து அந்த கட்சிகளின் தலைமையை வழிக்கு கொண்டுவரலாம். தேர்தலின் போது உங்களை பண விவகாரத்தில் கவனித்துக்கொள்கிறோம். மேலும் தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டால் கமல்ஹாசன் தரப்போ, அதிமுக தரப்போ காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் இழுக்க முயற்சிக்கும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையடுத்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, தனக்கு நெருக்கமான விழுப்புரம் விசிக எம்பி ரவிகுமாரிடம் திருமாவளவனை 6 தொகுதிக்கு சம்மதிக்க வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதே வேளையில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திருமாவளவனிடம், '6 தொகுதிகளை வாங்கிக்கோங்க. உங்களுக்கான செலவை நாங்க பார்த்துக்கிறோம்'என ஆசை வார்த்தைகளை வீசியிருக்கிறார். இதனால் சற்று மனம் இறங்கிய திருமாவளவனை அவரது கட்சியிலே இருக்கும் திமுக ஆதரவாளர்களைக் கொண்டு மனம் மாற்றும் முயற்சியும் நடந்தேறியுள்ளது.
இதன் காரணமாகவே மார்ச் 4ம் தேதி திருமாவளவன் 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டார். இதையறிந்த விசிகவினர் இதை ஏற்க கூடாது என திருமாவளவன் முன்னிலையிலே கட்சி அலுவலகத்தில் முழக்கமிட்டனர். ஆனால் திமுக ஆதரவு விசிக நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தால் சொந்த கட்சியினரின் எதிர்ப்பை மீறி, மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தெரிவிக்காமல் திமுகவுடன் 6 தொகுதிகளுக்கு ஒப்பந்தத்தில் திருமாவளவன் கையெழுத்திட்டார்.
மக்கள் நலக்கூட்டணியை தொடங்குவதற்கு காரணமாக இருந்த அவரையே வழிக்கு கொண்டுவந்துவிட்டதால் அடுத்தடுத்த தினங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளையும் 6 தொகுதிக்கு திமுக கையெழுத்துப் போட வைத்தது. தொடக்கம் முதலே 6 தொகுதிக்கு ஒப்புக்கொள்ளாமல் முறுக்கிக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேறு வழியில்லாமல் மார்ச் 8-ம் தேதி 6 தொகுதிகளை ஒப்புக்கொள்ள நேர்ந்தது.
திமுக கூட்டணியில் முந்திக்கொண்டு போய் குறைவான தொகுதிகளை வாங்கியதால் திருமாவளவன் மீது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT