Published : 12 Mar 2021 03:13 AM
Last Updated : 12 Mar 2021 03:13 AM
கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுகவுக்கு மீண்டும் ஒதுக்கவும், ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரியும் தொண்டர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் பட்டியல் அதிமுகவினர் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் (தனி), காட்பாடி, வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
சோளிங்கர், ஆற்காடு மற்றும் திருப்பத்தூர் தொகுதி பாமகவுக்கும் கே.வி.குப்பம் (தனி) தொகுதி அதிமுகவின் கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதில், வாணியம்பாடி தொகுதியில் அமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் கே.வி.குப்பம் தனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.லோகநாதனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. கே.வி.குப்பம் தொகுதி கூட்டணி கட்சிக்கு சென்றது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.வி.குப்பம் தொகுதியை புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்தும் தொகுதியில் மீண்டும் அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் இரவு லத்தேரியிலும், கே.வி.குப்பத்தில் நேற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், லோகநாதனுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்.எம்.சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதாகக் கூறி ராணிப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதுடன், தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக அதிமுக முன்னணி நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அறிவிக் கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கே.சி.வீர மணியின் கைதான் ஓங்கியுள்ளது. இதில், குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும் முதல்வர் பழனிசாமியால் தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சர் நிலோபர் கபீலுக்கு மீண்டும் வாய்ப்பு இருக்காது என எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டது.
இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றஒரே காரணத்துக்காக ஆம்பூர் தொகுதியில் நஜர் முஹம்மது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார். அதேபோல், வேலூர் மாவட்டத்தில் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்கக்கூடாது என்பதில் அமைச்சர் வீரமணி தெளிவாக இருந்தார். அதையும் அவர் நிறைவேற்றி உள்ளார்’’ என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT