Published : 11 Mar 2021 10:03 PM
Last Updated : 11 Mar 2021 10:03 PM
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள 15 சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு இருந்துள்ளது.
திருவண்ணாமலை, போளூர், செய்யாறு மற்றும் போளூர் தொகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளது. 2016-ல் நடைபெற்ற தேர்தலில் செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்திந்தது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ஒரு தொகுதி கூட, திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம்பெறவில்லை. இதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தில் ஆழ்த்தி உள்ளது.
அதே நேரத்தில், திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கு காரணம், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திமுகவினர் கூறும்போது, “திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், போட்டியிட வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் திமுக போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. உதயசூரியன் வெற்றிக்கு களப்பணியை தீவிரப்படுத்துவோம்” என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT