Published : 11 Mar 2021 06:19 PM
Last Updated : 11 Mar 2021 06:19 PM
புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தை குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பிறகு நாளை தெரிவிக்கப்படும் என பேச்சுவார்த்தைக்கு பின்பு எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 14 இடங்களில் பாஜக, அதிமுக கூட்டணிக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை பல்வேறு தரப்பில் நடைபெற்று வந்தது.
அதிமுகவுக்கு 4 தொகுதிகள் பாஜக ஒதுக்குவதாக கூறும் நிலையில், அதிமுக 7 தொகுதிகள் கேட்கிறது. புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் அதிமுக புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு எம்.சி.சம்பத் கூறும்போது," புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தை குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பிறகு நாளை தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, " புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக பாஜக பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. நாளை தொகுதி பங்கீடு முடிந்துவிடும்.
குறிப்பிட்ட நாளில் மூன்று கட்சிகளும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வோம். தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் உள்ளிட்ட ஏராளமான மத்திய அமைச்சர்கள் புதுச்சேரி வரவுள்ளனர்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT