Published : 11 Mar 2021 04:48 PM
Last Updated : 11 Mar 2021 04:48 PM
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தோழமைக்கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு முதல் இடம் ஒதுக்குவது வரை திமுக தலைமை ஐபேக் கொடுத்த ஆலோசனைப்படி செயல்படுவதால் இடம் ஒதுக்கீடு முடிந்தப்பின்னரும் தொகுதி பங்கீட்டிலும் கூட்டணிக்கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கொள்கை முடிவெடுப்பதிலும், கட்சியை வழிநடத்துவதிலும் பல்வேறு விதமான உத்திகளை பல்வேறு காலக்கட்டங்களில் எடுத்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் இதில் மிகச் சிறந்த உதாரணம். 1949-ல் தொடங்கப்பட்ட திமுகவை காலத்துக்கேற்ற வகையில் மாற்றியபடி அதில் புதியவர்களை இணைக்கும் பலவேறு நடைமுறைகளை கைகொண்டவர் அதன் தலைவர் கருணாநிதி.
ஆனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கான ஆலோசனை, வழிகாட்டுதல், சர்வேக்களுக்காக டீம் வைத்துக்கொள்ளவேண்டும் என வட மாநிலங்களில், மத்திய அரசின் தேர்தல் நடைமுறைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் 2014 மக்களவை தேர்தலில் கடைபிடிக்க ஆரம்பித்தனர். அதே நடைமுறை தமிழகத்திலும் வந்தது.
2016- சட்டப்பேரவை தேர்தலில் ஒரு டீம் திமுகவுக்காக வேலை செய்தது. அந்த நேரத்தில் திமுக தலைவராக கருணாநிதி இருந்த நிலையில் அந்த டீமும் ஸ்டாலினுக்காக நமக்கு நாமே ஐடியா கொடுக்க அது மிகப்பெரிய வரவேற்பை திமுகவுக்கு பெற்றுத்தந்தது. திமுக வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று அணிகளாக பிரிந்ததால் வாக்குகள் சிதறியதில் திமுக கூட்டணி 98 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக பழைய டீம் கிளம்ப அதன் பின்னர் ஐபேக் டீம் திமுகவுடன் இணைந்தது. தமிழகம் முழுவதும் திமுக முன்னணியினருடன் இணைந்து சர்வே, டேட்டா கலெக்ட் செய்வது, திட்டங்களை வகுத்துக்கொடுப்பது என செயல்பட்டது. அதன்படி திமுகவின் பிரச்சார உத்தி, கட்சி செயல்பாடுகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அதன் படி செயல்படுத்தப்பட்டது.
எப்படியும் வென்றே தீரவேண்டும் என்கிற முனைப்பில் திமுக தலைமை செயல்படுகிறது. இதற்காக ஐபேக் டீம் வகுத்துக்கொடுக்கும் திட்டப்படி திமுக கூட்டணிக்கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை திமுக முன்னணி தலைவர்களே உறுதிப்படுத்தினர். முதற்கட்ட திட்டப்படி அதிக அளவில் தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் வெல்வதற்கு ஏற்ற வகையில் நிற்பது.
180 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவேண்டும் என்கிற ஐபேக் டீமின் வழிகாட்டுதலால் திமுக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தோழமைக்கட்சிகளிடம் கெடுபிடி காட்டி தொகுதி எண்ணிக்கையை குறைத்தது. இதனால் 5 ஆண்டுகாலம் ஒரே கொள்கைக்காக போராட்டம், மக்கள் இயக்கம் என அனைத்திலும் உடன் நின்ற கட்சிகள் வருத்தமடைந்தன. வேறு வழியில்லாமல் தமிழக அரசியல் யதார்த்த நிலை கருதி ஒப்புக்கொண்டன.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியே. கடந்த முறை 41 தொகுதிகளில் நின்ற காங்கிரஸ் இம்முறை 25 தொகுதிகளில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதேப்போன்று ஐபேக்கின் இன்னொரு முக்கிய வழிகாட்டுதல் கூட்டணிக்கட்சிகள் அதிக இடங்களை வாங்கி தோற்கின்றனர் இதற்கு முக்கிய காரணமே சின்னம் தான் ஆகவே பெரும்பாலான கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்கவேண்டும் என்பதாகும்.
இதன் மூலம் சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும் முயற்சி நடந்தது. இதில் மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஐபேக் டீம் கொடுத்த வழிகாட்டுதலின்படி கூட்டணிக்கட்சிகளை நெருக்கி 60 தொகுகளுக்குள் முடக்கிய திமுக 174 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் மொத்தம் 187 தொகுதிகளிலும் போட்டியிடும் வலுவான நிலைக்கு நிலை நிறுத்திக்கொண்டது.
அடுத்து ஐபேக் டீம் கொடுத்த வழிகாட்டுதல் திமுக வலுவாக இல்லாத, அல்லது திமுக கூட்டணி வெல்ல முடியாத தொகுதிகள் பட்டியல், இதில் எக்காரணம் கொண்டும் கூடியவரை திமுக போட்டியிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தப்பட்டதால் அதன் அடிப்படையில் கட்சிகளிடம் தொகுதி குறித்த பேச்சு வார்த்தை நடக்கிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இனங்கட்ட தொகுதிகளின் பட்டியலை வைத்துக்கொண்டு கூட்டணிக்கட்சிகளிடம் அதை தள்ளிவிடுவதாக கூட்டணி கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
தங்களுக்கு விருப்பமான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலுடன் சென்ற கூட்டணிக்கட்சியினர் திமுக கொடுக்கும் தொகுதிகளை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். ஒரேடியாக திமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிபெறும் தொகுதிகளில் மட்டுமே நிற்பேன் என திமுக நடப்பது சரியல்ல, தொகுதி எண்ணிக்கையை குறைத்துவிட்டு அதிலும் வெற்றி பெற வாய்ப்பில்லாத தொகுதிகளை ஒதுக்குவது சரியான நிலைப்பாடல்ல என கூட்டணிக்கட்சிகள் வாதிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொகுதிகளை இனங்காணுவதில் சிக்கல் நீடிக்கிறது.
ஐபேக் இன்னும் எதிலெல்லாம் தலையிடுமோ என கூட்டணிக்கட்சிகள் தடுமாறி நிற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT