Published : 11 Mar 2021 03:26 PM
Last Updated : 11 Mar 2021 03:26 PM
எந்த காரணத்தினாலும் காங்கிரசை மக்கள் கைவிடுகிற நிலை புதுச்சேரியில் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் வல்சராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று (மார்ச் 11) புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"1990-ல் முதன்முதலில் மாஹே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டேன். அதிலிருந்து தொடர்ந்து 6 முறை மாஹே தொகுதியில் வெற்றி பெற்றேன்.
2016-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அப்பொழுதே கட்சி மேலிடத்தில் நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை, அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும், இளைஞர்களுக்கும் பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று கூறினேன்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபடுவேன். இதை கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டேன். கட்சியை வலுப்படுத்த இளைஞர்களின் சேவை தேவை. நான் சுகாதாரத்துறை அமைச்சராக அதிக முறை இருந்தேன். என்னுடைய காலத்தில் தான் மருத்துவ கல்லூரி புதுச்சேரிக்கு வந்தது, மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவ கல்வி வழங்கப்பட்டது.
சண்முகம், ரங்கசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் நான் அமைச்சராக இருந்தேன். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட 165 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நிறைய பேர் சமூக பணியில் ஈடுபட முன் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாஹே தொகுதியில் போட்டியிட 3 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமுள்ளவருக்கு சீட் வழங்கப்படும். காங்கிரஸ் அடித்தட்டு மக்களோடு சேர்ந்த ஒரு கட்சி. இது கட்சி என்பதைவிட ஒரு குடும்பம். குடும்பத்தில் சிலரது செயல் பிடிக்காது. சில நேரத்தில் அவர்கள் வெளியே போவார்கள். அதன்பிறகு 10 பேர் உள்ளே வருவார்கள். போவதற்கும், வருவதற்கும் தடையில்லாத ஒரு கட்சி காங்கிரஸ்தான்.
கட்சியின் நல்ல காலத்தில் இருப்பதும், கெட்ட காலத்தில் வெளியே செல்வதுமாக இருக்கக் கூடாது. 2016-ல் மாஹே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ராமச்சந்திரனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர் ஒரு பேராசிரியர், அரசியல்வாதி கிடையாது. பேராசிரியர் பணி நன்றாக செய்தார்.
அரசியலில் போதிய அனுபவம் இல்லாததால் அது தொகுதி வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. இப்போது எனக்கு மக்கள் ஓட்டு போட தயாராக உள்ளனர். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. எந்த காரணத்தினாலும் காங்கிரசை மக்கள் கைவிடுகிற நிலை புதுச்சேரியில் இல்லை .
தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாமல் இருந்தபோதும், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி இருந்துள்ளது. புதுச்சேரியில் நம்பர் கட்சி காங்கிரஸ்தான். தற்போதுள்ள பிரச்சினைகள் ஒவ்வொரு காலத்திலும் காங்கிரசுக்கு இருந்தது. அதையெல்லாம் கடந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது.
ரங்கசாமி என்னுடைய நெருங்கிய நண்பர். நான் எதிர்கட்சியில் இருந்தபோதும் எனக்கு உரிய மரியாதை கொடுத்தவர். அதனை எந்த காலத்திலும் மறக்க மாட்டேன். நட்பு என்பது வேறு, அரசியல் என்பது வேறு".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT