Published : 11 Mar 2021 02:58 PM
Last Updated : 11 Mar 2021 02:58 PM

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கரோனா விதிமீறல்: நடவடிக்கை கோரிய வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

கரோனா தொற்று பரவலை தடுக்க தனி மனித விலகல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மீறி ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும், முக கவசம் அணிவது, தனி மனித விலகலை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள், இந்த கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, நினைவிட திறப்பு விழாவுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்களை காவல்துறை அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர் எனக் கேள்வி எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

இதையடுத்து, மனுவுக்கு ஆறு வாரங்களில் விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x