Published : 11 Mar 2021 02:13 PM
Last Updated : 11 Mar 2021 02:13 PM
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று உறுதியானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதெனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தின. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி, தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொகுதி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் இன்று (மார்ச் 11) அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டுக்கொண்டனர்.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, "தலைமை நிர்வாக குழு விரைவில் கூடி வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள். திருப்திகரமான தொகுதிகள் கிடைத்திருக்கின்றன. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்று எதிர்க்கட்சி இல்லாத புதிய வரலாறு இம்முறை படைக்கப்படும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், மக்கள் நலனுக்காகவும், சமூகநீதியின் தொட்டில்தான் தமிழகம் என்பதை நிலைநாட்டவும் தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள்" என தெரிவித்தார்.
மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய எம்எல்ஏ இரா.சந்திரசேகரும், பாபநாசம் தொகுதியில் பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோபிநாதனும் போட்டியிடுகின்றனர். எனவே, இரு தொகுதிகளிலும் அதிமுக - மமக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT