Published : 11 Mar 2021 02:06 PM
Last Updated : 11 Mar 2021 02:06 PM
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தலைமையில் அம்மா மாளிகையில் இன்று (மார்ச் 11) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:
"நடைபெறவிருக்கும் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் தொடர்பான புகார்களை கண்காணிக்க 48 பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும். இக்குழுவானது உதவி செயற்பொறியாளர் தலைமையில் 1 காவல் உதவியாளர், 2 காவலர்கள் மற்றும் காணொலி பதிவு செய்பவர் ஆகியோருடன் செயல்படும்.
இக்குழுவானது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்கள், அச்சுறுத்தல், மிரட்டல், சமூக விரோத கூறுகளின் இயக்கம், மதுபானம், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்திற்காக பெரும் தொகை போன்ற புகார்களை கண்காணித்து தகுந்த முறையில் வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையத்தால் அதிக செலவினம் செய்யப்படும் தொகுதிகள் என கண்டறியப்பட்ட தொகுதிகளில் பறக்கும் படை குழுவினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு அரசியல் கட்சிகளால் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை சோதனையின்போது கைப்பற்றினால் இது தொடர்பான விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் எவ்வித பாரபட்சமின்றி கண்காணிப்பு பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட வேண்டும்.
ரொக்கம், மதுபானம் அல்லது வேறு ஏதேனும் வாக்காளர்களுக்கு வழங்க பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு புகார் வரும்பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வாகனங்களை பரிசோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு பறக்கும் படைக் குழுவினரால் உடனடியாக செல்ல இயலவில்லை எனில், அந்தப் பகுதிக்குட்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவுக்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
நடைபெறவிருக்கும் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் வருமான வரித்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படும். மேலும், சம்பந்தப்பட்டவரின் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீடு குழு (Appellate Authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 27.02.2021 முதல் செயல்பட்டு வருகிறது. 10.03.2021 வரை இக்குழுவானது புகார் அடிப்படையில் மற்றும் வாகன சோதனையின்போது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சத்து 82 ஆயிரம் ரொக்கமும், சுமார் 73 கிராம் தங்கம், 28.592 கிலோ கிராம் வெள்ளி, 2,960 கிலோ அரிசி மற்றும் சேலைகள், பாத்திரங்கள் மற்றும் சால்வைகள் போன்ற இதரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT