

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றாக இணைவார்கள் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி. டி. வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ அதிமுக ஜெயலலிதா, எம்,ஜி.ஆர் கட்சி. அதிமுகவை மீட்டெடுப்பதற்குதான் அமமுக உருவாக்கப்பட்டது. ஜனநாயக முறையில் நாங்கள் இதில் வெற்றி பெறுவோம். தேர்தலுக்கு பின்னர் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றாக இணைவோம்.’’ எனக் கூறினார்.
இந்த நிலையில் அதிமுகவின் சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன் மீண்டும் வாய்ப்பு வழங்கபடாததால் தினகரனுடன் இன்று சந்திப்பில் ஈடுபட்டிருக்கிறார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்குவதில் முரண் ஏற்பட்டது. தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், கூட்டணியில் இருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தங்கள் கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும் தேமுதிக இதுகுறித்து எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அமமுக, தேமுதிகவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 12-ம் தேதி அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.