Published : 11 Mar 2021 01:17 PM
Last Updated : 11 Mar 2021 01:17 PM

சேப்பாக்கத்தை கைகழுவிய பாஜக; உண்மையான போராளி எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை: கவுதமியை தொடர்ந்து குஷ்புவும் ட்வீட்

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்தது. இதற்காக பல மாதங்களுக்கு முன்னரே குஷ்பு அங்கு பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

ஆனால் குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் அதற்கு தெளிவான பதில் எதையும் கூறவில்லை. கட்சி வாய்ப்பளித்தால் செயல்பட வேண்டியதுதான் என்று மட்டும் பதில் அளித்தார்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னர் சேப்பாக்கம் தொகுதியில் பணிமனை ஒன்றை குஷ்பு உருவாக்கினார். கண்டெய்னர்கள் கொண்டு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பணிமனை பின்னர் வேட்பாளரின் பணிமனையாக மாறும் என்று பேசப்பட்டது.

குஷ்பு அந்தப் பணிமனையில் தினமும் வந்து அமர்ந்து தொண்டர்களின் குறைகளைக் கேட்டார், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் ஸ்கூட்டர் பேரணி சென்றார். தெருத்தெருவாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார், வயதான பெண்களின் காலில் விழுந்தார், கட்டிப்பிடித்தார், சிறுபான்மை மக்களைச் சந்தித்தார். ஒரு வேட்பாளர் என்னென்ன செய்வார்களோ அனைத்தையும் அவர் செய்தார். குஷ்புதான் பாஜகவின் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் என அனைவரும் நம்பினர்.

இந்நிலையில் நேற்று (10.03.21) மாலையில் சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு என்று அறிவித்து அதிமுக தரப்பில் தொகுதிப் பட்டியல் வெளியானது. இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேப்பாக்கம் தொகுதியில் குஷ்புதான் போட்டியிடுவார் என்று நம்பிக் கொண்டிருந்த அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து தனக்கு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

உண்மையான போராளி எதையும் எதிர்பார்ப்பதில்லை. பாஜகவின் உண்மையான போராளியாக சேப்பாக்கம்/ திருவல்லிக்கேணி தொகுதிக்காக கடினமாக உழைத்து வந்தேன். அத்தொகுதி மக்கள் என் மீது காட்டிய அன்பு, பாசம், மரியாதை உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருந்தது. நான் அவர்களுக்காக என்றும் கடன்பட்டிருக்கிறேன். அவர்கள் வாழ்வை மேம்படுத்தி, அதில் மகிழ்ச்சியை கூட்டுவதற்கான எனது கடமையை தொடர்ந்து செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். சேப்பாக்கம்/ திருவல்லிக்கேணி தொகுதிக்கு நான் பொறுப்பாளராகத்தான் இருந்தேன். நான் தான் வேட்பாளர் என்று ஒருமுறை கூட நான் சொன்னதில்லை. என்னுடைய பயணத்தில் என்னோட உறுதுணையாக நின்று, நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்பிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். கடந்த மூன்று மாதங்கள் அழகானதாகவும், மேம்படுத்துவதாகவும், ஒரு சிறந்த மனிதராகவதற்கான ஒரு பாடமாகவும் இருந்தன. சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதியுடனான எனது உறவு என் வாழ்க்கை முழுமைக்குமானது. களத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு வழங்கிய பாஜக, பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. எந்தவொரு கட்சியும் அடிமட்ட அளவில் பணிபுரியும் வாய்ப்பை எனக்கு வழங்கியதில்லை. ஒருவழியாக பாஜக அதை செய்துள்ளது. இந்த 3 மாதத்தில் நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய ட்வீட்டை நக்கலாக பார்ப்பவர்களுக்கு, தயவுசெய்து அதிகமாக யோசிக்க வேண்டாம், அமைதியாக இருக்கவும், நான் கட்சிக்காக பணிபுரிகிறேன், எது சிறந்தது என்று கட்சிக்கு தெரியும்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x