Published : 11 Mar 2021 01:08 PM
Last Updated : 11 Mar 2021 01:08 PM
பாஜகவும் அதிமுகவும் பகிரங்கமாக ஓர் அணி, பிற அணிகள் எங்களை எதிர்த்துப் போட்டியிடப் பாஜகவால் உருவாக்கப்பட்டவை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் பட்டியலை அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
''நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மிக மிக முக்கியமானது. வகுப்புவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றக்கூடாது என்பதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. அதனாலேயே தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துக் கவலைப்படாமல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்துள்ளோம்.
இன்றைய பேச்சுவார்த்தையில் மிகவும் சுமுகமான முறையில் கலந்துகொண்டு தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் (தனி), கோவை மாவட்டத்தில் வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி ஆகிய 6 தொகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
இந்த 6 தொகுதிகளிலும் மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் வேறுபாடில்லாமல் வெற்றி பெறுவோம். பாஜகவும் அதிமுகவும் பகிரங்கமாக ஓர் அணி. இந்த அணியால் உருவாக்கப்பட்ட, குறிப்பாகப் பாஜகவால் உருவாக்கப்பட்ட பிற அணிகள் (மக்கள் நீதி மய்யம், அமமுக) எங்களை எதிர்த்துப் போட்டியிடுகின்றன. ஒருபோதும் அவர்கள் வெற்றிபெற முடியாது. அவர்களால் டெபாசிட்டைக் கூட பெற முடியாது.
அவர்களின் நோக்கம் தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதல்ல. பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு போட்டியிடுகிறார்கள், அவர்களின் கனவு பகல் கனவாக முடியும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்''.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT