Published : 11 Mar 2021 12:34 PM
Last Updated : 11 Mar 2021 12:34 PM
திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் 5 இடங்களில் அதிமுகவை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் நேரடியாகப் போட்டியிடுகிறது.
சட்டப்பேரவை தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தோழமைக் கட்சிகள் கூட்டணியில் தொகுதி குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்கின. திமுக கூட்டணியில் இழுபறி நடந்துவந்த நிலையில் முதற்கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக உடன்பாட்டை எட்டியது. திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் இருவரும் மார்ச் 5-ம் தேதி கையெழுத்திட்டனர். 6 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தற்போது திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த தொகுதிகள் இதில் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் (தனி), கோவை மாவட்டத்தில் வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி ஆகிய 6 தொகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் இன்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட இடங்களையே பெரும்பாலும் திமுக ஒதுக்கி உள்ளது.
இதில் பவானிசாகர் (தனி), வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய 5 இடங்களில் அதிமுகவை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் நேரடியாகப் போட்டியிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT