Published : 11 Mar 2021 11:45 AM
Last Updated : 11 Mar 2021 11:45 AM

ஆதார் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க கோரிக்கை; உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டதாக கூறி, ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், குடிமக்களின் அடையாளத்திற்காக வழங்கப்படும் பயோமெட்ரிக் ஆதார் அட்டை உள்ள நிலையில், வாக்காளர்களை அடையாளம் காண வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் என்பது முறையாக நடைபெறவில்லை என்றும் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பான முகாம்கள் குறித்து தேர்தல் ஆணையம் முறையாக விளம்பரங்கள் வெளியிடுவதில்லை என்றும் ஆளும் கட்சியைச் சாராத தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவே வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் நடத்தப்படுவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கவில்லை என கூறியுள்ள மனுதாரர், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பயோமெட்ரிக் அடையாள அட்டை என்னும் அறிவியல்பூர்வமான நடைமுறை உள்ள நிலையில், பழைய நடைமுறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தேவையற்றது எனவும் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிட வேண்டுமெனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற வேண்டும் என்று நிர்பந்திக்காமல் பயோமெட்ரிக் அடையாள அட்டை வைத்திருப்பவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை இன்று (மார்ச் 11) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தேர்தல் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மனுவில் எழுப்பியுள்ள கோரிக்கைகள், தற்போதைய நிலையில் தொடர்பில்லாதவை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதேசமயம், அடுத்த பொது தேர்தலுக்கு முன் இதுபோன்ற கோரிக்கையுடன் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x