Published : 11 Mar 2021 11:41 AM
Last Updated : 11 Mar 2021 11:41 AM

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இவைதானா?- சென்னையில் வேளச்சேரியில் போட்டி?

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர மற்ற தொகுதிகளின் விவரம் வெளியாகியுள்ளது. இதில் திருவாடனையில் தொகுதி மாறி காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி போட்டியிடுகிறார். திமுக மாவட்டச் செயலாளர் எதிர்ப்பையும் மீறி கே.ஆர்.ராமசாமி தொகுதியில் நிற்கிறார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்தது. ஆனால் திமுக தரப்பில் 18 தொகுதிகள் எனக்கூற பேச்சு வார்த்தை கடும் இழுபறியானது. இதில் திமுக கூட்டணியில் தொடரலாமா என்கிற நிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் யோசிக்க தொடங்கினர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தை நிறைவுப்பெற்று காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவானது. திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதியானதை அடுத்து திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளும் கூட்டணியை உறுதிப்படுத்தின. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் பல முட்டுக்கட்டைகள் வந்தன.

காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் ஏற்கெனவே வென்ற 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை அளிக்க திமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முதுகுளத்தூர் தொகுதியில் ராஜக்கண்ணப்பன் போட்டியிட வாய்ப்புள்ளதால் அந்தத்தொகுதியை தர முடியாது என திமுக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு காரணம் அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஒருமுறை பேட்டி அளித்தது லோக்கல் திமுகவினரிடையே கோபத்தை கிளறியதால் அவரைப்பற்றி மேலிடத்தில் புகார் அளித்தனர். அதனாலும் அந்தத்தொகுதியை தர திமுக மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 25 தொகுதிகளில் 24 தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் தென்காசி தொகுதியை திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபனுக்கு ஒதுக்க முடிவு செய்ததால் அந்தத்தொகுதியில் இழுபறி நீடிக்கிறது.

தற்போது காங்கிரஸ் போட்டியிட திமுக ஒதுக்கிய இடங்கள் குறித்து காங்கிரஸ் தரப்பில் வெளியாகியுள்ள தொகுதிகள் விவரம். இவை அதிகார பூர்வ தொகுதிகள் அல்ல, ஆனால் பெரும்பாலும் இந்தத்தொகுதிகளே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு உறுதியாகி உள்ள தொகுதிகள்:

1.பொன்னேரி, 2.ஸ்ரீபெரும்புதூர், 3.வேளச்சேரி, 4.கள்ளக்குறிச்சி, 5.விருதாச்சலம், 6.மேலூர், 7.ஊத்தங்கரை, 8.திருவாடனை, 9.காரைக்குடி, 10.கிள்ளியூர், 11.குளச்சல், 12.தாராபுரம், 13.விளவங்கோடு, 14.நாங்குநேரி, 15.அறந்தாங்கி, 16.ஈரோடு கிழக்கு, 17. உதகை, 18.சிவகாசி, 19.ஸ்ரீ வைகுண்டம், 20.ஸ்ரீவில்லிபுத்தூர், 21.உடுமலைபேட்டை, 22.கோவை தெற்கு, 23.ஓமலூர், 24. தென்காசி (இழுபறியில் உள்ளது)

இதில் அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகிறது. அதில் திருநாவுக்கரசர் மகன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x