

கமலை விமர்சித்துவிட்டு அவருடன் கூட்டணி ஏன் என்பது குறித்து சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், சரத்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதிமுகவிலிருந்து விலகியது ஏன்?
அரசியலில் வெற்றி - தோல்வி இருக்கும். தோல்வியடைந்தால் மீண்டும் அரசியலுக்கு வருவதில் தயக்கம் நிலவுகிறது. ஆனால், தேர்தலை சந்திக்க வேண்டும் என நான் கூறினேன். அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக, அவர்களுடனேயே பயணித்தோம். அதில் நான் பயன்படுத்தப்பட்டேன். எங்கள் தனித்துவம் போய்விட்டது. எங்கள் விகிதாச்சாரத்தை தெரிந்துகொள்ள வெளியேறினோம்.
திமுகவுடன் ஏன் சேரவில்லை?
திமுகவுடன் அடிப்படையான நாகரிகத்துடன் தான் பழகிக்கொண்டிருக்கிறேன். அவர்களுடன் நான் இருக்கலாம் என, அங்கு யாரும் பிரதிபலிக்கவில்லை. நான் அரசியல் தொழிலதிபர் இல்லை. பணத்துக்காக கட்சி மாறி மாறி செல்லும் அரசியல்வாதி நான் இல்லை. எங்கள் கட்சியின் விகிதாச்சாரம் என்ன, எங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என திமுக நினைத்திருக்கலாம். யாரும் என்னை அழைக்கவில்லை.
திமுக - அதிமுக மாற்று என்பது வேறு வழியில்லாமல் எடுக்கப்பட்ட முடிவா?
தனியாக நின்று எங்கள் விகிதாச்சாரத்தை நிரூபிக்க வேண்டி எடுக்கப்பட்ட முடிவுதான். எல்லோரும் ஒன்றாக சேரலாம் என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து கூறியபோது, அந்த யோசனை என்னை கவர்ந்தது. தனியாக தேர்தலில் நிற்பதென்பது வேறு. சீமான் நிற்கிறார், அந்த நிலைமை வேறு. விஜயகாந்த் நிற்கும்போது நிலவிய சூழ்நிலை வேறு. ஏன் நாம் இறங்கக்கூடாது என்று எண்ணிதான் இந்த முடிவு எடுத்துள்ளோம்.
கமலும் நீங்களும் இணைந்திருப்பது இயற்கை கூட்டணியா?
சீமானை கூட நான் அழைத்து பேசினேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. கமலிடம் பேசியபோது அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் இணைந்தோம்.
கமல் மீது நீங்கள் கடுமையாக விமர்சனம் வைத்திருந்தீர்களே?
நான் எந்தவொரு விமர்சனமும் வைக்கவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்தபோது பேசியது அரசியல் ரீதியானது அல்ல. குறிப்பிட்ட விஷயத்தில் பேசியதை இறக்கும் வரை நியாபகம் வைத்திருந்தால் நான் மனிதன் கிடையாது. அப்படி பார்த்தால் மனோரமா ரஜினியை கடுமையாக பேசியுள்ளார். அதன்பிறகு, ரஜினி மனோரமாவை தன் திரைப்படங்களில் நடிக்க வைத்தார். கோபம் சில சமயங்களில் வெளிப்பட செய்யும். அதனை மறக்க வேண்டும். வைகோ திமுகவை விமர்சித்தது இல்லையா?
அமமுகவுடன் ஏன் சேரவில்லை?
அவர்கள் ஏற்கெனவே ஒரு கிளை மாதிரிதான் செயல்படுகின்றனர். அதிமுகவில் இருந்தவர்கள்தானே இங்கும் உள்ளனர். அதிமுகவுடன் நான் பணியாற்றியிருக்கிறேன். புதிய முயற்சியில் ஈடுபட்டதுதான் இந்த கூட்டணி,.
இந்த கூட்டணி பாஜகவுக்கு உதவியாக அமையாதா?
புதிய கூட்டணி உருவானால் பாஜகவின் 'பி டீம்' என்பார்கள். அப்படி சொல்வது அரசியலில் இழுக்கு. வாக்குகள் சிதறத்தான் செய்யும்.
சசிகலாவை சந்தித்து என்ன பேசினீர்கள்?
அவருடைய சொந்தத்தில் பலரை எனக்கு தெரியும். அவருடன் நான் பயணித்திருக்கிறேன். அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் அரசியலில் இருந்து விலகுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அரசியல் குறித்து நான் பேசவில்லை.
குடும்ப தலைவிக்கு அதிமுகவும், திமுகவும் நிதியுதவியை வாக்குறுதியாக அளித்திருக்கிறார்களே?
அதனை நான் வரவேற்கவில்லை. அதனை கமல் சொல்லியிருக்கிறார். பெய்ஜிங்கில் குடும்ப தலைவிக்கு இத்தகைய நிதியுதவி அளிப்பது குறித்து கமல் சிந்தித்திருக்கலாம் என எண்ணுகிறேன். ஆனால், 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்குக் கடன் இருக்கிறது. 1,500 ரூபாய் பணம், ஒரு சிலிண்டர் ரூ.825 என கணக்கு வைத்தாலே, 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு சேர்த்து, தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருகிறது. இதை எப்படி செய்வார்கள்? எங்கிருந்து கொடுப்பார்கள்? இலவசங்களை தவிர்க்க வேண்டும். ஆனால், கமல் லேப்டாப் தரப்படும் என்று சொல்லியிருக்கிறார். வீட்டிலிருந்து பணிபுரிய அது உதவியாக இருக்கும் என்பதால் அந்த திட்டத்தை சிந்தித்துப் பார்க்கலாம். வைஃபை வசதி கொடுக்க வேண்டும் என நானும் சொல்லியிருக்கிறேன். பயனுள்ள திட்டங்களை அறிவிக்கலாம்.
இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.