Published : 11 Mar 2021 09:37 AM
Last Updated : 11 Mar 2021 09:37 AM
தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவையாறு, 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
பாஜக சார்பில் கேட்ட தொகுதிகள் சில கிடைக்காத நிலையில் மாற்று தொகுதிகளாக வேறு சில தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவநாசி அல்லது ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என பரவலாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் அவநாசி தொகுதியில் சபாநாயகர் தனபால் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவரே தற்போது அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார். அவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக அவரும் அறிவிக்கப்பட்டு விட்டார்.
அவநாசி மற்றும் ராசிபுரம் இரண்டு தொகுதிகளுமே நட்சத்திர தொகுதியாக இருப்பதாலும் அதிமுகவின் முன்னணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதி என்பதால் அது பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
அதேசமயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT