Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM
கரோனா ஊரடங்கால் சாகுபடி பரப்பு குறைந்ததால் மதுரை மல்லிகைப் பூக்களுக்கு நிரந்தர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி 60 சதவீதம் குறைந்தது.
குண்டு குண்டாகப் பருத்து, மனதை மயக்கும் மனமும், வெண்மையும் கொண்ட மதுரை மல்லிகைப் பூக்கள் காண்பவர் மனதை ஈர்க்கும். இந்த பூக்களுக்கு ஆண்டு முழுவதுமே மக்களிடம் வரவேற்பு உண்டு. வீடுகளில் நடக்கும் விழாக்கள் முதல் கோயில்கள், பொது நிகழ்ச்சிகளில் மல்லிகைப் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
கரோனாவுக்குப் பிறகு மாட்டுத்தாவணி சந்தைக்கு 80 சதவீத மதுரை மல்லிகைப் பூக்கள்வரத்து நிரந்தரமாகக் குறைந்தது. இங்கிருந்துதான் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. பூக்கள் பற்றாக்குறையால் சிங்கப்பூர், மலேசியா, கனடா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு மதுரை மல்லிகைப் பூ ஏற்றுமதி 60 சதவீதம் வரை குறைந்தது.
அதனால், முகூர்த்த நாட்கள் இல்லாவிட்டாலும் சாதாரண நாட்களில்கூட கிலோ ரூ.1000 முதல்ரூ.2,000 வரை விலை அதிகமாக விற்பதால் நடுத்தர, ஏழை மக்கள் மல்லிகைப் பூ வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மல்லிகைப் பூ ஏற்றுமதியாளரும், மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவருமான சோ.ராமச்சந்திரன் கூறியதாவது:
ஒரு வாரமாக மல்லிகைப் பூ வரத்து முற்றிலும் குறைந்தது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் 50 டன் முதல் 70 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. அதற்கு முந்தைய காலங்களில் 100 டன் வந்தது. சீசன் காலத்தில் 150 டன்வரை வந்தது. ஆனால், கரோனா ஊரடங்கின்போது பூக்களை வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் செடிகளைப் பராமரிக்காமல் இருந்தனர். பலர் மாற்று விவசாயத்துக்குச் சென்றனர்.
மார்கழி, தை மாதங்களில் மதுரையில் தொடர் மழை பெய்தது. மழை நீர் தேங்கி செடிகள் பாதிக்கப்பட்டன. தற்போது வழக்கத்துக்கு மாறாக பனி அதிகமாக பொழிவதால் பூக்கள் உற்பத்தி குறைந்தது. அதனால், நேற்று 5 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. சிங்கப்பூர், மலேசியாவுக்கு மட்டும் 2 டன் பூக்கள் பெயரள வுக்கு ஏற்றுமதியாகிறது. மற்றநாடுகளுக்கு ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT