Last Updated : 06 Nov, 2015 01:38 PM

 

Published : 06 Nov 2015 01:38 PM
Last Updated : 06 Nov 2015 01:38 PM

சென்னை: பள்ளி கட்டிடத்தில் அரசு கல்லூரி இயங்கும் அவலம்

வட சென்னையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று, பள்ளிக்கட்டிடத்தில் இயங்குவதால், வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை என்று ஆசிரியர்களும், மாணவர்களும் வருந்துகின்றனர்.

வட சென்னையில் வசிக்கும் மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக தமிழக அரசு 2012-ம் ஆண்டில், திருவொற்றியூரில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் துவக்கியது. அப்போது, கல்லூரிக்கான சரியான இடம் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், நகராட்சிப் பள்ளியில் கல்லூரி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்து மூன்று வருடங்கள் ஆகியும் கல்லூரி, மாநகராட்சிப் பள்ளியிலேயேதான் செயல்பட்டுவருகிறது. அங்கு ஏற்கனவே படித்துவந்த பள்ளி மாணவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

கல்லூரி திறப்பு விழாவின் போது தொடங்கப்படுவதாய்க் கூறப்பட்ட, அறிவியல் படிப்புகள் இன்னும் துவங்கப்படவில்லை.

வருடாவருடம் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறைவான அளவிலேயே வகுப்பறைகள் இருக்கின்றன. அதில் முறையாக வகுப்புகளை எடுக்க முடியாமல், கல்லூரிப் பேராசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தற்போது கல்லூரியில், இளங்கலைப் படிப்புகளான வணிகம், கணிப்பொறி பயன்பாடுகள் மற்றும் அடிப்படை படிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன.

இக்கல்லூரியில், சென்ற ஆண்டில் 251 பேர் படிக்க, இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 342 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். கல்லூரி ஆரம்பித்த ஆண்டான 2012 - 13ல் 218 மாணவர்களும், 2013 - 14ல் 221 மாணவர்களும் படித்தனர். இதனால் போதுமான அளவு அடிப்படை கல்லூரி வசதிகள் இல்லை என்று ஆசிரியர்களும், மாணவர்களும் வருந்துகின்றனர்.

பூந்தோட்டம் சாலையில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதற்கு எதிரே பெருநிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் தனியார் அடுக்குமாடிப் பள்ளியைக் காட்டிலும் சிறியதாக இருக்கிறது.

கல்லூரி முதல்வரிடம் இது குறித்துக் கேட்டபோது, கருத்துச் சொல்ல மறுத்துவிட்டார். இது குறித்துப் பேசிய திருவொற்றியூர் எம்.எல்.ஏ. குப்பன், "கல்லூரி கட்டுவதற்காக மணலிக்கு அருகில் இடம் பார்க்கப்பட்டது; ஆனால் சில காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் பள்ளி இருக்கும் இடத்திலேயே கல்லூரி கட்டுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நகரின் மையத்தில் பள்ளி இருப்பதால் போக்குவரத்துக்கு சிரமமில்லாமல் இருக்கும் என்பதாலேயே இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், முதல்வர் ஜெயலலிதாவால் ஆர்.கே.நகர் தொகுதியில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் இதே நிலைமை வந்துவிடாது என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் கல்லூரியும், இப்போது மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x