Published : 10 Mar 2021 11:31 PM
Last Updated : 10 Mar 2021 11:31 PM
இரண்டாம் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஆகையால் அனைத்து கட்சிகளுமே தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
முதற்கட்டமாக இன்று (மார்ச் 10) மாலை 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாமக.
அதன்படி, மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, விருத்தாசலம் - ஜே.கார்த்திகேயன், சேப்பாக்கம் - ஏ.வி.ஏ கஸ்ஸாலி, நெய்வேலி - கோ.ஜெகன், கும்மிடிப்பூண்டி - எம்.பிரகாஷ், சோளிங்கர் - அ.ம.கிருஷ்ணன், கீழ்வேளூர் (தனி) - வேத முகுந்தன், காஞ்சிபுரம் - பெ.மகேஷ்குமார் மற்றும் மைலம் - சி.சிவகுமார் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்படி கட்சியின் மூத்த பிரமுகர்களான ஜி.கே.மணி பென்னாகரத்திலும், கே.பாலு ஜெயங்கொண்டான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆத்தூரில் திண்டுக்கல் மாவட்டம்) திலகபாமா, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் ஆறுமுகம், தருமபுரியில் வெங்கடேசன், ஆற்காடு தொகுதியில் இளவழகன், திருப்பத்தூர் ராஜா, சேலம் மேற்கு தொகுதியில் அருள், செஞ்சியில் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.
இதுவரை, பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளில் மொத்தம் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. விரைவில் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 4 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது பாமக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT