Published : 10 Mar 2021 07:54 PM
Last Updated : 10 Mar 2021 07:54 PM

சேப்பாக்கம், ராஜபாளையத்தைக் கை கழுவிய பாஜக: குஷ்பு, கவுதமி ஏமாற்றம்; உதயநிதிக்கு ரூட் க்ளியர்

சென்னை

சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியிடும், உதயநிதிக்குக் கடும் சவாலாக இருப்பார் குஷ்பு எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால், தொகுதிப் பணியாற்றிய குஷ்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளில் மிகவும் வேகம் காட்டியது பாஜக. அதிலும் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் அறிவிப்புக்குப் பல மாதங்களுக்கு முன்னரே குஷ்பு அங்கு பொறுப்பாளராக இறக்கி விடப்பட்டார். அவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக திமுக தரப்பில் பேசப்பட்டது. இதையடுத்து உதயநிதிக்கு எதிராக பாஜக தரப்பில் குஷ்பு களமிறக்கப்படுவார் என்ற தகவல் வலுவானது. குஷ்புவிடம் கேள்வி எழுப்பியபோது அவர் அதை ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. கட்சி வாய்ப்பளித்தால் செயல்பட வேண்டியதுதான் என்று பதில் அளித்தார்.

பின்னர் தொகுதி முழுவதும் குஷ்பு பேரணியாகச் சென்றார். பல இடங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு பதிலளித்தார். எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேட்டி அளித்தார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னர் தொகுதியில் குஷ்பு பணிமனை ஒன்றைச் சொந்த செலவில் உருவாக்கினார். கண்டெய்னர்கள் கொண்டு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பணிமனை பின்னர் வேட்பாளரின் பணிமனையாக மாறும் என்று பேசப்பட்டது.

குஷ்பு அந்தப் பணிமனையில் தினமும் வந்து அமர்ந்து தொண்டர்களின் குறைகளைக் கேட்டார், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் ஸ்கூட்டர் பேரணி சென்றார். தெருத்தெருவாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார், வயதான பெண்களின் காலில் விழுந்தார், கட்டிப்பிடித்தார், சிறுபான்மை மக்களைச் சந்தித்தார். ஒரு வேட்பாளர் என்னென்ன செய்வார்களோ அனைத்தையும் அவர் செய்தார். குஷ்புதான் பாஜகவின் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் என அனைவரும் நம்பினர்.

உதயநிதி ஸ்டாலின் நிற்கும் பட்சத்தில் குஷ்பு அவருக்கு டஃப் கொடுப்பார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குஷ்பு சேப்பாக்கத்தில் எங்கும் காணப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை முதலே சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியில்லை என்கிற தகவல் வெளியானது. பின்னர் அந்தத் தொகுதி பாமகவுக்கு எனத் தகவல் வெளியானது. மாலையில் அந்தத் தொகுதி பாமகவுக்கு என்று அறிவித்து அதிமுக தரப்பில் தொகுதிப் பட்டியல் வெளியானது.

இதேபோன்று நடிகை கவுதமியும் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. கவுதமியும் தொகுதியில் மக்கள் குறைகளைக் கேட்டு வந்தார். ஆனால், பாஜக பட்டியலில் ராஜபாளையம் தொகுதி இல்லை. இதனால் கவுதமியும் போட்டியில் இல்லை என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் இன்று ட்வீட் செய்துள்ள குஷ்பு வீடு வீடாகப் பிரச்சாரம், நோட்டீஸ் கொடுத்தேன். அனைத்து இடங்களிலும், எந்த இடத்திற்குப் போனாலும் பொதுமக்கள் என் மீது அன்பையும் ஆசியையும் பொழிந்தார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x