Published : 10 Mar 2021 07:32 PM
Last Updated : 10 Mar 2021 07:32 PM

177 தொகுதிகளில் 15 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த அதிமுக

அதிமுக தலைமை அலுவலகம்: கோப்புப்படம்

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தலில் 177 தொகுதிகளில் 15 பெண்களுக்கு மட்டுமே அதிமுக வாய்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்.6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக இன்று (மார்ச் 10) 171 தொகுதிகளுக்கான 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.இதில், 14 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது. அதில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.தேன்மொழி எம்எல்ஏ போட்டியிடுகிறார். எனவே, அதிமுக வெளியிட்ட 177 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 15 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிட்ட பட்டியலின்படி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அண்ணாநகர் தொகுதியிலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி ஆலந்தூரிலும், முன்னாள் எம்எல்ஏ கணிதாசம்பத் செய்யூர் தனித் தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியிலும், பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர் பரிதா குடியாத்தம் தனித் தொகுதியிலும், ஓசூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி ஓசூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

எம்எல்ஏ சித்ரா ஏற்காடு தொகுதியிலும், அமைச்சர் சரோஜா ராசிபுரம் தனித்தொகுதியிலும், எம்எல்ஏ பொன்.சரஸ்வதி திருச்செங்கோடு தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தி துறையூர் தனித் தொகுதியிலும், தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபாரதி கந்தர்வகோட்டை தனித் தொகுதியிலும், விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் லட்சுமி கணேசன் சிவகாசி தொகுதியிலும், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூர் தொகுதியிலும், அமைச்சர் ராஜலெட்சுமி சங்கரன்கோவில் தனித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x