தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான்கு தொகுதிகள்தான்: புதுச்சேரி அதிமுகவினர் கடும் அதிருப்தி

புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ: கோப்புப்படம்
புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட உள்ளதால் அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக, அதிமுக போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரங்கசாமியும், பாஜகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான பேச்சுவார்த்தைக்கு அதிமுகவை அழைக்கவே இல்லை. இங்கேயே அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி பாஜக மேலிடப் பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா கேட்டுக்கொண்டார். ஆனால், அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என நிர்ணயம் செய்யாமல் கையெழுத்திட முடியாது என அன்பழகன் தெரிவித்தார். இதன் மூலம் புதுவை அதிமுக கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி, அதிமுக தரப்பில் விசாரித்தபோது, "என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கட்சிகள் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. கடந்த தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்களை ஒதுக்கியுள்ளனர். கடந்த தேர்தலில் 4 இடத்தில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கு 8 இடங்களை ஒதுக்க வேண்டும் என புதுவை அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக ஒரு இடத்திலும் கடந்த தேர்தலில் வெல்லவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தின்படி, புதுவையில் அதிமுகவுக்கு அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு வங்கி உள்ளது. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 4 தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் எனத் தகவல் பரவி வருகிறது. இதனால், கட்சித் தலைமையை தொடர்புகொண்டு கட்சி உயர் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 14 தொகுதிகளில் சரிபாதியாக 7 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்று கட்சித் தலைமைக்குக் கோரியுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

இதுபற்றி, பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் பாஜகவுக்கு காங்கிரஸிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். அதனால், 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளது. அதனால்தான் இக்கூட்டணியில் உள்ள பாமகவுக்கே தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் அக்கட்சி மேலிடத்திலும் பேசியுள்ளோம். விரைவில் தொகுதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகும்" என்கின்றனர்.

இந்நிலையில், பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ், புதுச்சேரி, காரைக்காலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். அவர் முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளரைத் தேர்வு செய்து பாமக தலைமைக்கு பட்டியலை அனுப்பியுள்ளார். ஒப்புதல் கிடைத்த பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர். கூட்டணியிலுள்ள பாமகவைத் தொடர்ந்து அதிமுகவும் அதிருப்தியில் உள்ளதால் இக்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் பாஜக ஈடுபட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in