Published : 10 Mar 2021 03:33 PM
Last Updated : 10 Mar 2021 03:33 PM
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையிலான கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி முடிவுக்கு வருகிறது. இரு கட்சிகளுக்கும் தலா 14 தொகுதிகள் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டு இன்று கையெழுத்தாகிறது.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
காங்கிரஸிலிருந்து எம்எல்ஏக்கள் பலர் விலகியதால் திமுக கூட்டணியில் தங்களுக்குக் கூடுதலான தொகுதிகளைத் தர வேண்டும் என வலியுறுத்தியது. கூட்டணிக்கும் திமுக தலைமையேற்கும் என்றும் வலியுறுத்தினர். இதனால், புதுவையில் நடந்த 2 சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், கட்சித் தலைமை முன்னிலையில் பேசுவது என முடிவு செய்தனர்.
கட்நத 2 நாட்களாக புதுவை திமுக அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா, நாஜிம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் கந்தசாமி ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இவர்களோடு திமுக 2-ம் கட்டத் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவுக்குக் கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதில் அக்கட்சித் தலைமை உறுதியாக இருந்தது. இதனால் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், புதுச்சேரி கூட்டணி தொடர்பாக இன்றுக்குள் (மார்ச் 10) முடிவு செய்து அறிவிக்க இரு கட்சித் தலைமைகளும் அறிவுறுத்தியுள்ளன.
இதுபற்றி, திமுக - காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "திமுக தலைமை உறுதியாக இருந்ததால் காங்கிரஸ் தனது முடிவை தளர்த்திக் கொண்டது. புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 14 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், கூட்டணிக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கீடு தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை.
அதேபோல், கூட்டணிக்குத் தலைமை என யாரும் அறிவிக்கமாட்டார்கள். எந்தக் கட்சி அதிகமாக வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகிறது" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT