Published : 10 Mar 2021 03:22 PM
Last Updated : 10 Mar 2021 03:22 PM
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என, அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 இடங்களை பாஜக, அதிமுக கட்சிகள் பகிர்ந்து கொள்வது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், மீண்டும் அக்கட்சிக்கே இத்தொகுதி ஒதுக்கப்படவுள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இத்தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக, நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக தலைவர் சோமு (எ) இளங்கோவன் இன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் கூறுகையில், "இத்தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக உறுப்பினர்களைச் சேர்த்து, தாமரை சின்னத்தை கிராமம் கிராமமாகச் சென்று வளர்த்துள்ளோம். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தெரியாதவர்களே இங்கு இல்லை. இத்தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குவதாக செய்தி கேள்விப்படுகிறோம். வேட்பாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இத்தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வகையில் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும். கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருக்கும், தேர்தல் பொறுப்பாளருக்கும் இதனை வேண்டுகோளாக வைக்கிறோம். கட்சி முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். எனினும், கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT